நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது என்பது தலையிடிக்காகத் தலையணையை மாற்றுவதற்கு ஒப்பானது என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இந்த முறையை மாற்ற வேண்டுமானால் அதனைக் கொண்டு வந்தவர்களுடன் கலந்தே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றுக் காலை அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். “நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை எமது அரசு கொண்டுவரவில்லை. நாட்டில் தற்போது நடை பெறும் தீயவிடயங்களுக்கு நிறைவேற்று அதிகார முறையே காரணம் என்று கூறுவதில் எந்த நியாயமும் இல்லை.
அப்படிக் கூறுவது தவறானது என்றே நான் கூறுவேன்.” என்றும் அவர் அந்தச் சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அந்த நாட்டுப் பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை குறித்துக் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, “அந்தக் கட்டுரை குறித்து நாம் மன்னிப்புக் கோரியுள்ளோம். அந்தக் கட்டுரையும் குறித்த இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறவுள்ள காலகட்டத்தில், போப்பாண்டவரின் இலங்கை வருகை அமைந்துள்ளமை தொடர்பில் அவரிடம் வினவப்பட்டபோது, “தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். தேர்தல் நடைபெற வேண்டும் என்றுதான் எதிர்க்கட்சித் தலைவரும் விரும்புகின்றார்.
போப்பாண்டவர் வருவதால் தேர்தலை நிறுத்துமாறு கோரி வத்திக்கானில் இருந்து இதுவரை எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை” என்று பதிலளித்தார் ஜனாதிபதி. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் அரசியலுக்கு வரவுள்ளார் என்று வெளியாகும் தகவல்கள் குறித்து ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்களால் வினவப்பட்டது. “கோத்தபாய ராஜபக்ஷ அரசியலுக்கு வருவது குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நான் முன்னர் ஒரு தரம் அவரிடம் அரசியலுக்கு வருமாறு அழைத்தபோது அவர் அதை மறுத்திருந்தார்” என்று ஜனாதிபதி அதற்குப் பதிலளித்தார்.
தொடர்ந்து அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளில் எந்த வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது. அவர்களுக்குரிய சட்டங்கள் தொடர்பில்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம். அரச சார்பற்ற நிறுவனங்களின் அமைப்புக் குறித்து ஆய்வு செய்து ஒழுங்குபடுத்துவதல் பற்றித் திட்டமிடுகின்றோம்.
பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அரசுக்கு பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களை நாட்டில் தடைசெய்யும் நோக்கம் இல்லை.” என்று தெரிவித்தார்.
















