பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இந்திய அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கருத்துக்களும் அதில் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார் இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று நடை பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் குறிப் பிடும்போது, “பாதுகாப்பு அமைச்சின் இணை யத்தளத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பில் அவதூறான கருத்துக்கள் இடம்பெறவில்லை. அந்தக் கட்டுரையில் இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும் சேது சமுத்திர திட்டம் குறித்தும் தெற்காசிய கடற்பிராந்தியத்தில் மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பிலான தகவல்களுமே இடம்பெற்றிருந்தது.
இந்திய அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் எவையும் அதில் இடம்பெறவில்லை. இந்த கட்டுரை தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டவர்களில் 100 இற்கு 90 வீதமானவர்கள், இணையத்தளத்தில் வெளியான கட்டுரையை முழுமையாக வாசிக்கவில்லை.
அவர்கள் அந்த கட்டுரையுடன் வெளியான ஒளிப்படத்தை பார்த்தே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். உண்மையில் குறித்த படம் பாதுகாப்பு இணையத்தளத்தினை பராமரிக்கும் நபரின் ஊடாகவே பதிவேற்றப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், “இராணுவத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக 30 ஆயிரம் பேர் தப்பிச்சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் இராணுவத்தில் இணைய விரும்பினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
ஊழல்கள் மற்றும் ஆயுத துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால் அத்தகையோர் அந்த விசாரணைகளின் பின்னர் நிரபராதி என காணப்பட்டால் மாத்திரமே அவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர்.
இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றுள்ள வீரர்கள் எவராயினும் தாம் இராணுவ சேவையிலிருந்து விலகுவதாக முறையாக அறிவித்தால் அவர்களுக்குரிய கொடுப்பனவுகளையும் மீளப்பெற முடியும்” என்று தெரிவித்தார்.
















