சிறீலங்காவிற்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழகம் – இந்திய நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. குழப்பம்

fire-mahindaசிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கட்டுரையை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு நீக்கி, இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடமும் முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் தெரிவித்துள்ளபோதும் தமிழகத்தின் கொந்தளிப்பு இன்னமும் அடங்கவில்லை.

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி வரும் கடிதங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில், ‘நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்களில் அர்த்தம் உள்ளதா?’ என்பதுதான் அதன் தலைப்பு. அதாவது, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் காதல் கடிதம் எழுதுவதாகச் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அந்தப் பதிவு அமைந்திருந்தது. ஷெனாலி டி. வடுகே என்ற பெயரில் எழுதப்பட்டிருந்த அக்கட்டுரைக்கு கொச்சைத்தனமான வரைபடம் ஒன்றையும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்தது.

ஏற்கனவே தமிழக முதல்வர் குறித்து தரக்குறைவான, அநாகரிகமான கேலிச் சித்திரங்களை சிறீலங்கா அரச சார்பு ஊடகங்கள் வெளியிட்டிருந்ததுடன், தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் எனவும் கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த வாரம் மலினமான கட்டுரையை வெளியிட்டிருந்தது. எழுதப்பட்ட அக் கட்டுரையில் ‘சிறீலங்கா அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட இந்தியக் குழுவினர், இந்தியா – சிறீலங்கா உறவில் தமிழ்நாடு குறுக்கீடு இருக்காது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு அவர்கள் மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்து பார்க்கும்போது, தமிழக மீனவர்கள் அவர்கள் கடல் எல்லையில் மீன் வளம் இல்லாததால் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறுகின்றனர் என்பதை ஜெயலலிதா மறுக்க முடியாது என்பது உறுதியாகிறது. எனவே இலங்கையைக் குற்றம்சாட்டி மோடிக்கு கடிதம் எழுதும் தந்திரத்தை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஆட்டுவித்த மாதிரி எல்லாம் ஆட மோடி ஒன்றும் அவரது கைப்பாவை இல்லை என்பதை ஜெயலலிதா தெரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை. கடிதத் தந்திரத்தை கைவிட்டுவிட்டு மோடி வலியுறுத்துவது போல் யதார்த்த நிலையை உணர்ந்து அரசாட்சி செலுத்துவது ஜெயலலிதாவுக்கு நல்லது. இந்தியச் கடலில் மீன்வளம் குறைந்துவிட்டால் அண்டை நாட்டுக் கடலில் அத்துமீறி மீன்பிடிக்கலாம் என்பது அர்த்தமில்லை. மாறாக, ஜெயலலிதா தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’ எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக முதல்வருக்கு எதிராக வெளியிடப்பட்ட இந்தக் கருத்தால் தமிழகத்தில் கட்சி வேறுபாடின்றி தி.மு.க. முதல் அ.தி.மு.கவை எதிர்க்கும் கட்சிகள் வரை அனைத்தும் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வெளியான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

ராஜ்யசபா நேற்று திங்களன்று (4) காலை கூடியதும், கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பின்னர் சபை மீண்டும் கூடியபோது, அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட உறுப்பினர்கள் சபையின் நடுவே வந்து, சர்ச்சைக்குரிய கட்டுரையின் நகலை காண்பித்து முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது சபை தலைவர் ஹமீத் அன்சாரி, கேள்வி நேரத்தை இதுபோல வீணடிப்பது சரியல்ல. இருக்கைகளில் சென்று அமருங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மீண்டும் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்சினை லோக்சபாவிலும் எழுப்பப்பட்டது. சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை வலியுறுத்தினார். தொடர்ந்து மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அதிமுகவினர் குரல் எழுப்பினர். இதனால் லோக்சபா நடவடிக்கையும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனையற்ற மன்னிப்பினை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் முதல் பக்கத்தில் வெளியிட்ட மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். குறித்த கட்டுரை வெளியான உடனேயே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குறித்த கட்டுரை தொடர்பில் இந்தியா உடனடியாக இராஜதந்திர ரீதியில் செயற்பட்டிருந்தது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பில் உடனடியான நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் இந்தியாவின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுமாயின் அது தொடர்பில் ஆராயப்படும்.

எனினும் விடயம் உடனடியாக உரிய தரப்புக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறித்து இந்திய அரசாங்கம் திருப்திகொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். எனினும், தமிழகத்தில் இந்தக் கட்டுரைக்கு எதிரான நிலை வலுத்துவருகின்றது. நேற்று தமிழக முதல்வரை அவமதித்த சிறீலங்காவின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள சிறீலங்காத் தூதரகத்திற்கு முன்பாக காலை பத்து மணிக்கு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று சிறீலங்கா அரசுக்கு எதிரான கோசங்களை முன்வைத்தனர்.

தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம், ‘உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க நினைக்காதே, நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல 10 கோடி தமிழர்களின் தாயை!, தேசபிதா என்றால் காந்தி, பெரியார் என்றால் ஈவெரா, அம்மா என்றால் எங்க முதல்வர்தான்!, மகிந்தவே உன் காடைத்தனத்தை இலங்கையோடு நிறுத்திக்கொள்!’ போன்ற வாசகங்களுடன் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

இதுதொடர்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்த சிறீலங்கா அரசின் தூதரகம் இனி தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது. இந்திய அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சென்னைக்கு சென்ற சிறீலங்கா கிரிக்கெட் அணியினர் விமான நிலையத்தில் வைத்துத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். சென்னையில் இடம்பெறவிருந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றபோதே, 16 பேர் கொண்ட அந்த அணியினர் சிறீலங்காவிற்கு எதிராக தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் விமான நிலையத்தில் சென்றிறங்கியபோதும் அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திருச்சியிலுள்ள சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் ஆசன பதிவு காரியாலயத்துக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சியிலுள்ள குறித்த அலுவலகத்தின் மீது கடந்த 2ம் திகதி சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழகக் காவல்துறையினர் தெரிவித்தனர். உதவி காவல்துறை அதிகாரி தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு குறித்த அலுவலகத்துக்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் கட்டுரைக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ‘தாயே என்னை மன்னித்து விடுங்கள் நான் பிழை செய்துவிட்டேன்’ என்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கோருவதைப் போன்ற சுவரொட்டிகள் தமிழகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. தமது கரங்களை கூப்பிய நிலையில் ஜெயலலிதா முன்னால் மண்டியிட்டு மகிந்த ராஜபக்ச மன்னிப்பு கோருவதைப் போன்று இந்த சுவரொட்டிகள் அமைந்துள்ளன.

நன்றி: ஈழமுரசு

Tags: , , , ,

Leave a Reply