ஜப்பானிய திரைப் படத்திலிருந்து திருடப்பட்ட ‘சரபம்’ – ஆதாரத்துடன் அம்பலம்…

sarabam-gameசமஸ்கிருத தலைப்புடன் கடந்த வாரம் வெளியான த்ரில்லர் திரைப்படம் – ‘சரபம்’.

சிரிப்பு நடிகர் அனுமோகனின் மகன் அருண் மோகன் இயக்கிய இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது ஏக எதிர்பார்ப்பு நிலவியது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றியடைந்துவரும் சி.வி.குமாரின் தயாரிப்பு என்பதே எதிர்பார்ப்புக்குக் காரணம்.

ஜிகர்தண்டா படத்துக்கு போட்டியாக அதே தினத்தில் வெளியான சரபம் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ரசிகர்கள் தீர்ப்பு எழுதியநிலையில், 2003 ஆம் ஆண்டு வெளியான ‘கேம்’ என்ற ஜப்பானியத் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பியே சரபம் படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு சில காட்சிகளை அல்ல, ஒட்டுமொத்த படத்தையே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்கள் கேடு கெட்டவர்கள்.

‘சரபம்’ படத்தில் தொழிலதிபரின் மகளான சலோனியை கடத்தி வைத்து நாயகன் நவீன் சந்திரா 30 கோடி ரூபாய் பணம் கேட்பார். கேம் படத்தில் ‘30 மில்லியன் யென்’ பணம் கேட்கிறார் அப்படத்தின் ஹீரோ.

‘சரபம்’ படத்தில் நாயகி சலோனி பணம் சம்பாதித்துவிட்டு ஆஸ்திரேலியா போய் செட்டிலாக வேண்டும் என ஆசைப்படுவார். ‘கேம்’ படத்தின் நாயகியும் ஆஸ்திரேலியாவிற்குதான் செல்ல விரும்புவதாக சொல்கிறார்.

‘சரபம்’ படத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் ப்ராஜெட் நாயகன் விக்ரமுக்கு (நவீன் சந்திரா) தரப்படுகிறது. ஆனால் கலர் சரியில்லை எனும் ஒற்றை காரணத்திற்கு ப்ராஜெட்டை நிராகரிக்கிறார் சந்திரசேகர்(ஆடுகளம் நரேன்). கேம் படத்தில் விளம்பர நிறுவனமொன்றில் பணியாற்றும் சகுமாவிற்கு, மிகப்பெரிய பீர் கம்பனியின் ப்ராண்டின் இமேஜை உயர்த்த பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட கேளிக்கை விஷயங்களை கையாளும் டைனா மிக்ஸ் எனும் ப்ராஜெக்ட் தரப்படுகிறது. ஆனால் இது தேவையற்ற செலவு என ப்ராஜெட்டை நிராகரிக்கிறார் அந்த பீர் கம்பனி நிறுவனரின் வாரிசு கஸ்துரகி.

‘சரபம்’ படத்தில் தனது கனவு நிறைவேறாத கோபத்தில் சந்திரசேகருக்கு பாடம் கற்பிக்க அவரது வீட்டிற்கு செல்கிறான் விக்ரம். அந்நேரம் சந்திரசேகரின் மகள் வீட்டின் சுவர் ஏறி குதிப்பதை கண்டு அவளை பின்தொடர்கிறான். இந்த காட்சி அப்படியே கேம் படத்தில் உள்ளது.

‘சரபம்’ படத்தில் ‘ரெஸ்ட் ரூம் செல்கிறேன்’. நீயும் வருகிறாயா?’ எனக்கேட்கிறாள். அதன் பிறகு இருவரும் அங்கிருக்கும் ரெஸ்டாரன்ட்டில் நுழைகிறார்கள். காப்பசினோ ஆர்டர் செய்கிறாள் சஞ்சனா. கேம் படத்தில் ரெஸ்ட் ரூம் என்பதற்கு பதிலாக டாய்லட் என்ற வசனம். ஹோட்டல் ஒன்றினுள் அவளை நெருங்கும்போது ‘டாய்லட் செல்கிறேன். அங்கும் வருவாயா? எனக்கேட்கிறாள். அதன் பிறகு இருவரும் அங்கிருக்கும் ரெஸ்டாரன்ட்டில் நுழைகிறார்கள். காப்பசினோ ஆர்டர் செய்கிறாள் ஜூரி.

‘சரபம்’ படத்தில் ‘போதைக்கு அடிமையாக இருக்கும் எனக்கு தந்தை பணம் தர மறுக்கிறார்’ என புலம்புகிறாள் சஞ்சனா. தன்னை கடத்திவிட்டதாக சொல்லி தந்தையிடம் பணம் கேள் என விக்ரமுடன் சொல்கிறாள் சஞ்சனா. அதன்படி 30 கோடி கேட்டு மிரட்டுகிறான் விக்ரம். டீல் முடிந்து பணம் கைக்கு வந்ததும் சஞ்சனாவின் கைகளை கட்டி வீட்டருகே விடுகிறான் விக்ரம்.

கேம் படத்தில் ‘என் அம்மா இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்டார் அப்பா. சித்தி மற்றும் அவளது மகள் சிஹாரு ஆகியோருடன் வாழ விருப்பமில்லை’ என புலம்புகிறாள். டீல் முடிந்த பிறகு கைகளுக்கு பதில் கதாநாயகியின் கண்கள் கட்டப்படுகின்றன.

‘சரபம்’ படத்தில் சற்று நேரத்தில் எதிர்பாராத திருப்பமாக ‘சஞ்சனா பிணமாக கண்டெடுக்கப்பட்டாள்’ எனும் செய்தியை டி.வி.யில் கண்டு அதிர்கிறான் விக்ரம். உண்மையில் இறந்தது சஞ்சனாவா அல்லது அவளைப்போலவே உருவ ஒற்றுமை இருக்கும் தங்கை ஸ்ருதியா என்றொரு திருப்பம் வருகிறது. இன்னொரு திருப்பமாக விக்ரமுக்கு பெரிய ஷாக் ஒன்றை தருகிறார் சந்திரசேகர். அந்த அதிரடி திட்டத்தை நிறைவேறியது எப்படி என்பதை அவனது ‘வீட்டில்’ சொல்கிறார்.

கேம் படத்தில், டி.வி.க்கு பதில் பெரிய கட்டிட வளாகத்தின் ராட்சத திரையில் செய்தி. இறந்தது நாயகி ஜூரியா அல்லது சித்தி மகள் சிஹாருவா என்ற சஸ்பென்ஸ். தன் அதிரடி திட்டத்தை ஹோட்டலில் வைத்து சொல்கிறார் பீர் கம்பெனி அதிபர்.
என்று சரபம் படத்தின் ஒவ்வொரு காட்சியும் கேம் படத்திலிருந்து உருவப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட திருடர்கள் திருட்டு விசிடிக்காக போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுப்பது வெட்கக்கேடு.

Tags: , ,

Leave a Reply