இலங்கை அரசு இணைய தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக எழுதியிருந்ததை எதிர்த்து, தமிழ்த் திரையுலகின் சார்பில் கடந்த திங்கள் அன்று சென்னையில் போராட்டம் நடைபெற்றது. திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட அந்த விழாவில் கவிஞர் தாமரையும் கலந்து கொண்டு பேசியிருந்திருக்கிறார்.
அது குறித்த செய்தியை வெளியிட்டுள்ள நக்கீரன் வாரமிருமுறை பத்திரிகையின் இணைய தளத்தில், ஏற்கனவே கருணாநிதி முதல்வராக இருந்த போது அவர் பேசியதையும், இப்போது பேசியிருப்பதையும் இணைத்து, “அது வேற வாய்…” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது. கூடவே அது குறித்த விடியோவும்.
“அழுகுறது, புலம்புறது, கதறுவது என்பதையெல்லாம் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இந்த தமிழக முதல்வர் கலைஞர் செய்யலாமா?” என்று அப்போது பேசியிருந்த தாமரை, சமீபத்திய கூட்டத்தில், “தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். வேறு என்ன அவரால் செய்ய முடியும்? வேறு என்ன உரிமை இருக்கிறது?” என்று பேசியிருக்கிறார்.
அது வேற வாய்! அன்றும் இன்றும் – கவிஞர் தாமரையின் பேச்சு! (Video)
பரபரப்பாக இந்த விடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விடியோ குறித்து தனது பதிலடியை வெளியிட்டிருக்கிறார் கவிஞர் தாமரை.
இப்படியொரு விமர்சனம் இப்போது முகநூலில் உலா வருகிறது. பதில் கூறியிருக்கிறேன். நான் திமுக அல்லது அதிமுக சார்ந்தவளல்லள். நான் ஈழத்திற்கு நன்மை நிகழ வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவள். அந்த இடத்திலிருந்துதான் இதைப்பார்க்க வேண்டும். அரசியல் சார்பு கொண்டவர்கள், விதண்டாவாதம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.
இந்த விவாதத்தை இணைய நண்பர்களுக்கு விடுகிறேன்.
எல்லாம் ஒரே வாய்தான். அன்று ஒன்றரை லட்சம் மக்கள் இறந்து கொண்டிருந்தார்கள். தமிழக முதல்வர் கடிதம் (அதுவும் மத்திய ஆட்சியில் பங்கு கொண்டிருந்த நிலையில்) எழுதிக் கொண்டிருந்தது என்பது மிக மிகக் குறைவான நடவடிக்கை. இன்றைய தமிழக முதல்வர் சட்டசபையில் இலங்கை மீதான நீதி விசாரணை , பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றிய பிறகு, கச்சத்தீவு மீட்புக்கான சட்டபூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு கடிதம் எழுதுகிறார்.
என் வாய்க்கோ, கண்களுக்கோ யார் தமிழக முதல்வர் என்பதல்ல முதன்மை, அந்தப் பதவியில் இருக்கும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி. இதோ நீங்கள் எடுத்தாண்டிருக்கும் இதே காணொளியில் நான் அன்றைய எதிர்க்கட்சித்தலைவராக இருந்த ஜெயலலிதா அம்மையாரை ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதா அம்மையார் ‘அமாவாசை’ என்று சாடியிருப்பேன். முதல்வராக இருந்த கலைஞர் அவர்களை ‘ அமாவாசைக்கு அடுத்த நாள்’ என்றும் கூறியிருப்பேன். இருவருக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதே சாரம். அதே நான் தான் இன்று, ஈழப் பிரச்சினையில் தமிழக முதல்வராக இன்று இருக்கக் கூடிய ஜெயலலிதா அம்மையார் எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆதரித்து , அதே காரணத்தால் அவர் மீது இலங்கை கொண்டிருக்கும் வன்மத்தை உணர்ந்து , அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறேன்.
அவ்வளவு ஏன், என் பேச்சின் ஆரம்பத்திலேயே அதைத் தெளிவாகக் கூறியிருக்கிறேனே.
நடுநிலை உள்ளவராக நீங்கள் இருந்தால் அதையும் எடுத்துப் பதிவிட வேண்டும். நேற்றைய திரைத்துறையினர் கூட்டத்தில் ஒருவர் கூடத் துணிந்திருக்க மாட்டார்கள் அப்படிப் பேசுவதற்கு. அம்மையார் 2009 போர் இறுதிக்கட்டத்திலிருந்து தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார், எனவே நாங்களும் அவர் குறித்த நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லியிருப்பேன். துணிவிருந்தால் எடுத்துப் பதிவிடுங்கள். நான் அரசியல்வாதி அல்லள். அரசியல் ஆதாயங்கள் எதிர்பார்ப்பவளும் அல்லள். என் பேச்சு உணர்வுபூர்வமானது, நிலைப்பாடுகள் சார்ந்தது. என் ஒவ்வொரு பேச்சும் அப்படித்தான்.
இணையத்தில் பலரும் அரைகுறைகள் என்று தெரிகிறது. சரியாகப் படிப்பதும் இல்லை, கூர்ந்து கவனிப்பதுமில்லை, கேட்பதும் இல்லை. ஒருவரைத் தாக்க வேண்டும் என்று நினைத்தால் அவ்வளவுதான், எதையாவது பதிய வேண்டியது. இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று அலுப்பாக இருக்கிறது. பல பேருக்கு வேறு விதமான கோபங்கள் வேறு என்மேல்! அதிலொன்று நான் மதச் சார்பற்றவள் என்பது. இந்த வாய்ப்பை அந்தக் கடுப்பைத் தீர்த்துக்கொள்ளப் பயன் படுத்துகிறார்கள். Sorry, what am i doing, responding to all this undue noises ?? What a WASTE OF TIME !!!!!!!
நேற்றைய கூட்டம் பொதுக்கூட்டமன்று. கொடுக்கப்பட்ட 2 நிமிடத்தைத் தாண்டிப் பேசியிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் அங்கு விளக்கமளித்துக் கொண்டிருக்க முடியாது. அதே போல், கேட்கும் அனைத்து வகையினரையும் திருப்திப்படுத்தும் படி பேசவும் முடியாது. என் நிலைப்பாடுகளைத்தான் பேச முடியும்.
தெளிவாகச் சொல்கிறேன்… தமிழ், தமிழினம் சார்ந்ததே என் நிலைப்பாடு. எந்தத் தலைவரையும், கட்சியையும், தனிப்பட்ட நபரையும் சார்ந்தது அல்ல. மேலும் எனக்கு எந்த லாப, நட்டக் கணக்குகளும் இல்லை. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும். குறைமதியாளர்களுக்கு அல்ல.
















