“புலிப்பார்வை” பாலச்சந்திரனை வரிப்புலிச் சீருடையணிந்த விடுதலைப் போராளியாகச் சித்தரிக்கின்றது : யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை

pulipparvai3தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்படும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை திசை திருப்புவதற்கு யாருக்கும் இடமளிக்க முடியாது என்றும் அவ்வாறு திசை திருப்ப முனைவோர் எவராயினும் அவர்கள் பெரும் விளைவுகளை அனுபவிக்க வேண்டி ஏற்படும் என்றும் மேற்படி பேரவை எச்சரித்துள்ளது.

இயக்குநர் பிரவீன்காந் உண்மையிலேயே தமிழ் மக்களில் பற்றுடன் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தால் அதை வேறு விதமாக சித்தரித்திருக்கலாம். ஆனால் எமது போராட்டத்தை கேவலப்படுத்தும் வகையில் இந்தத் திரைப்படம் இயக்கப்படுகின்றது. எதிர்ப்புக்களையும் மீறி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டால் கூட அதனை வெளியீடு செய்வதற்கு தமிழக மாணவர்களும் தமிழக உணர்வாளர்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் மேற்படிப் பேரவையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை நிறுத்துவதற்கு தமிழக மாணவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பையும் பாராட்டையும் தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை, கடல் கடந்த தமிழர்களுக்காக கரம்கொடுக்கும் மாணவர்களுடன் தாங்கள் உணர்வால் ஒன்றித்து நிற்பதாகவும் தெரிவித்துள்ளது. ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் எடுக்கின்ற ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் தாங்கள் என்றும் ஆதரவா இருப்பதாகவும் பேரவை தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை நேற்று (07.08.2014) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புலிப்பார்வை திரைப்படம் தொடர்பாக கேள்விப்பட்டபோதும் நாம் அமைதியாக இருந்தோம். ஆனால், அதன் சில காணொளிகள் தற்போது பார்வைக்கு கிடைத்த பின்னர்தான் அது உண்மையிலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதை உணர்ந்துகொண்டோம்;. இது தொடர்பாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் எமது யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்துள்ளோம். இந்த ஆராய்வின் முடிவில் புலிப்பார்வை திரைப்படம் எமது தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதால் அதற்கு எமது வன்மையான கண்டனத்தை வெளியிடுகின்றோம்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அப்பழுக்கற்றது. இது நீதியானது. எவரையும் அடிபணிய வைக்கும் நோக்கத்துடன் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை. மாறாக தமிழ் மக்கள் அந்நியரிடம் இழந்த சுதந்திரத்தைப் பெறுவதற்கே போராடினார்கள். இதில் எந்த தவறுகளும் இடம்பெறவில்லை. சிறிலங்கா அரசாங்கம் கூறுவது போன்று ஈழப்போரில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், பிரவீன்காந் இயக்குகின்ற புலிப்பார்வை திரைப்படம் ஈழப்போரில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக சித்தரிக்கின்றது. அதிலும், தமிழீழ தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரனை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற இந்த திரைப்படம் ஏதுமறியாத அப்பாவிப் பாலகனை போர்ப் பயிற்சி எடுத்த போராளியாகச் சித்தரிக்கின்றது. இது அப்பட்டமான பொய்.

பாலச்சந்திரன் ஏதுமறியாத சிறுவன். போராட்டச் சிந்தனைகள் இன்றி வளர்ந்தவன். புலிகளின் பாசறைகளுக்கு தோழமையுடன் சென்றுவந்தபோதிலும் அந்தச் சிறுவனுக்கு போராட்ட உணர்வுகள் இருந்திருக்கவில்லை. ஆயுதப் பயிற்சியும் அவன் எடுத்திருக்கவில்லை. பிரவீன்காந்த் சித்தரிப்பது போன்று எதிரியுடன் அவன் எதிர்த்துக் கதைத்திருக்கமாட்டான். அவன் எதிரியின் பிடியில் சிக்குண்டிருந்தபோது அச்சத்துடன் இருந்தானே தவிர எதிரிகளைப் பார்த்து கர்ச்சித்திருக்மாட்டான். ஆனால், பாலச்சந்திரன் பேசுவதாக பிரவீன்காந் சித்தரிக்கின்ற வார்த்தைகள் கடினமானவை. சாவுக்கு அஞ்சாத ஒரு சிறந்த போராளியால் மட்டுமே பாலச்சந்திரன் பேசுவதாக திரைப்படத்தில் சித்தரிக்கப்படுகின்ற வார்த்தைகளைக் கூற முடியும். இந்தப் படம் பாலச்சந்திரனை ஒரு ஆயுதப் பயிற்சி பெற்ற, வரிப்புலிச் சீருடையணிந்த விடுதலைப் போராளியாகச் சித்தரிக்கின்றது. இந்த திரைப்படம் அதிகளவில் சோடிக்கப்பட்ட பொய்களைக் கொண்டிருக்கின்றது.

ஈழப் போராட்டம் நகைப்புக்கிடமான போராடம் அன்று. இது நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களினதும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களினதும் உயிர்களை விலையாகக் கொடுத்து கட்டியெழுப்பப்பட்ட போராட்டம். மக்களினதும் போராளிகளினதும் தியாகத்தால் உருவான இந்தப் போராட்டத்தை எவரும் எளிதில் உணர்ந்துகொள்ள முடியாது. மக்களோடு மக்களாக, போராளிகளோடு போராளிகளாக வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே இதை புரிந்துகொள்ள முடியும். உணர்வுகளால் உருவான இந்தப் போராட்டத்தை சித்தரிப்பதற்கு தேசிய உணர்வுள்ளவர்களால் மட்டுமே முடியும். பிரவீன்காந் அந்த உணர்வுடையவர் அன்று. அப்படி அவர் உணர்வுடையவராக இருந்திருந்தால் இந்த திரைப்படத்தின் கதைக்கருவை மாற்றியமைத்திருக்க முடியும். இனியும் காலம் கடந்துவிடவில்லை. உண்மையாக அவர் எமது விடுதலைப் போராட்டத்தை நேசித்தால் அந்தப் படத்தின் கதைக்கருவில் மாற்றம் செய்து படத்தை மீளமைக்க முடியும்.

ஈழப்போரில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை வலியுறுத்தப்பட்டு ஐ.நா விசாரணைக்குழு அமைகப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடனேயே இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகின்றது. புலிப்பார்வை திரைப்படத்தின் கதைக்கருவை பிரவீன்காந் மகிந்தவிடம் நேரில் தெரிவித்ததாக கூறப்படுவது உண்மையாவோ பொய்யாகவோ இருக்கலாம். ஆனால், இது தமிழ் மக்களின் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் கொச்சைப்படுத்துவதற்காக எடுக்கப்டுகின்ற திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

எனவே, யாழ். மாவட்ட தமிழ் மக்கள் பேரவையானது யாழிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பு என்ற ரீதியில் இந்த திரைப்படத் தயாரிப்பை நிறுத்துமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம். மீறி இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவதற்கு பிரவீன்காந் முற்பட்டால் அதை தடுத்து நிறுத்துகின்ற மாபெரும் செயற்பாட்டை தமிழக மாணவர்களும் தமிழகத்திலுள்ள உணர்வாளர்களும் முன்னெடுப்பார்கள் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகின்றோம்.

தமிழ் மக்கள் பேரவை
யாழ்.மாவட்டம்
07.08.2014

Tags: ,

Leave a Reply