நியதிச்சட்டங்கள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமிடையேயான முரண்பாடு உச்சத்தை அடைந்துள்ளது. மாகாண சபைச் சட்டவிதிகளில் ஒன்றின் அடிப்படையில் முதலமைச்சர் நிதியச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது எனின் ஆளுநர் நிதியம் எந்த அடிப்படையில் நடைமுறையில் உள்ளது எனக் கேள்வி எழுப்பி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வடமாகாண சபையின் நிதி நிர்வாகம் தொடர்பான மூன்று சட்டமூலங்கள் ஆளுநரின் பார்வை மற்றும் ஒப்புதலுக்காக முன்னர் அனுப்பப்பட்டிருந்தன. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்தை ஆளுநர் நிராகரித்திருந்தார். வடக்கு மாகாண நிதி நியதிச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்த ஆளுநர், கைமாற்று முத்திரை வரிச் சட்டத்தை அங்கீகரித்திருந்ததுடன். முதலமைச்சர் நிதியச் சட்டத்தை மாகாண சபைச் சட்ட விதிகளில் ஒன்றைக் காரணம் காட்டி, நிராகரித்திருந்தார். இந்த நிலையிலேயே – முதலமைச்சர் நிதியச் சட்டம் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் – ஆளுநர் நிதியம் எந்த சட்டக்கோவையின் அடிப்படையில் செயற்படுகின்றது எனக் கேள்வி எழுப்பி கடிதம் ஒன்றை நேற்று ஆளுநருக்கு முதலமைச்சர் அனுப்பிவைத்திருக்கின்றார்.
















