மூன்று தசாப்தங்களிற்கு மேலாக நடைபெற்றயுத்தத்தில் பல ஆயிரக்கணக்கானோர் கொலைசெய்யப்பட்டும் காணாமல்போயுமுள்ளனர். இவற்றுக்கு பலரது முகவரிகள் இன்னும் கண்டுகொள்ளப்படவில்லை. பல்வேறுவிதமான இடப்பெயர்வு சூழல்கள் இதற்குகாரணமாக அமைந்துவிட்டன. அதில் ஒன்றாகவே மன்னார் மாந்தை திருக்கேதீச்சரம் மனித புதைகுழியையும் கருத வேண்டியுள்ளது.
1999ம் ஆண்டு 07ம் மாதமுற்பகுதியில் “ரணகோசபடை வநடவடிக்கை” தீவிரப்படுத்தப்பட்டு மக்களை பல்வேறு துன்பங்களுக்கு உட்படுத்தி இடம்பெயர செய்தகாலத்தில் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் வெளிமாவட்டங்களுக்கு துண்டிக்கப்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகளுடைய அனுமதி இன்றி (புலவுபாஸ்) போக்குவரத்தில் பலர் ஈடுபட்டதாக அக்காலத்தில் பேசப்பட்டது.
அவ்வாறு பயணம் செய்தவர்களில் பலருடைய தொடர்புகள் இல்லாமல் போயிருந்ததால் அவர்களும் மாந்தை புதைகுழியில் புதைக்கப்பட்டதாக வலுவான சந்தேகம் எழுகின்றது. ஏனெனில் இந்தபிரதேசம் 1990ம் ஆண்டு 06 ம் மாதத்தின் பின்னர் முழுமையான படை கட்டுப்பாட்டு பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலைய முன்னரங்கப் பகுதியாக இருந்து வருகின்றது.
இந்தப்பிரதேசம் எக்காலத்திலும் விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்ததில்லை. எனவே குறித்த இடத்தில் வீதி அபிவிருத்தி திணைக்கள கட்டடம் பலநோக்கு கூட்டுறவுசங்க கிளை அலுவலகம் பாடசாலை கிணறுபோன்ற பல முக்கியமான அடையாளங்கள் இருந்துள்ளன. 1990ல் படையினர் இப்பிரதேசத்தை கைப்பற்றிய பின்னரே இவை மறைக்கப்பட்டிருக்கலாம். ஆகவே இதனை திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மனித புதைகுழியாகவே கருதமுடிகிறது.
இந்துக்களின் புனித பூமியாக இருக்கின்ற காரணத்தினால் அந்தபிரதேசத்தில் கத்தோலிக்கர்கள் எந்த நூற்றாண்டிலும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்க முடியாது அவ்வாறு எனில் எப்படி சேமக்காலை இருந்திருக்க முடியும்?
செம்மணி போன்று பல இடத்தில் இனப்படு கொலை புரிந்து புதைத்துவிட்டு ஏமாற்றிய அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் முழு இனப்படுகொலையை புரிந்துவிட்டு உலகை ஏமாற்றும் அரசாங்கம் மாந்தை புதைகுழியில் மட்டும் நியாயத்ததை பெற்றுத்தருமென நாங்கள் நம்புவதற்கு தயாரில்லை.
எனவே இவை சர்வதேச நிபுணர்கள் குழுவினை கொண்டு ஆராயப்பட்டு அதில் பெறப்பட்ட மனித எச்சங்கள் சர்வதேச நிபுணர்களின் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதுவே எமது மக்களின் இழப்புக்கழுக்கு ஒத்தடம் கொடுப்பதாக அமையும். குறித்த விடயத்தில் அந்த பிரதேச அரசியல்வாதிகள் மௌனமாக இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
















