பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட வாள்கள் யாழில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் இங்கு மேலும் கூறியதாவது,
யாழில் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை நாம் கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியுள்ளோம்.
இருந்தாலும் வாள் வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இது பற்றி பொலிசாருக்கு பொது மக்கள் தகவல்களை தந்தால் அவர்களை கைது செய்வோம்.
அனைவரினதும் ஒத்துழைப்பு பொலிசாருக்கு கிடைக்க பெற்றால் இரண்டே வாரத்தில் யாழில் நடைபெறும் வாள் வெட்டு சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
மேலும் இவற்றுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட வாள்கள் 5 மீட்கப்பட்டுள்ளன.
அவர்களிடம் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவற்றை யாழ்ப்பாணத்திலேயே தாம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் அவை யாரால் யாழ்ப்பணத்திற்கு கொண்டுவரப்பட்டது எங்கு வைத்து விற்பனை செய்யப்படுகின்றது, என்ற தகவல்கள் கிடைக்க பெறவில்லை.
அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன கூடிய விரைவில் இந்த வாள்களை விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஆவா குழுவிடம் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு (கிரனைட்) தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டபிள்யூ. பி விமலசேன இதன்போது சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது,
ஆவா குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபர் தொடர்ந்து விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளபப்ட்ட விசாரணைகளின் போது எவ்வாறு கிரனைட் வந்தது என்பது தொடர்பாக எதுவேமே சொல்லவில்லை
அது தொடர்பாக பொலிசார் புலன் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருக்கின்றனர் என்றார்.
















