ஊடகவியலாளர்கள் மீது விடுக்கும் அச்சுறுத்தல் நிறுத்தப்பட வேண்டும் -அரியநேத்திரன்!

ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு துறையினரால் மாத்திரமல்ல அதிகாரிகளினாலும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இதனை நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ஒருவரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்தமையைக் கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு பிரிவினராலும் அரசாங்க படைகளாலும் தற்பொழுது அதிகாரிகளினாலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை சில அதிகாரிகள் ஏற்படுத்தியிருக்கின்றனர்.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒருவர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக நாங்கள் அறிகிறோம்.
இது உண்மையில் கண்டிக்கத்தக்க ஒரு விடயம். ஊடகவியலாளர் சுதந்திரமாக செயற்படும் ஒரு நாடாக இலங்கை இருக்கிறது என்று அரசாங்கம் சொன்னாலும் கூட இன்று ஊடக சுதந்திரம் இல்லாமல் இருப்பதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

இணையத்தளங்களில் வருகின்ற செய்திகளை வைத்துக்கொண்டு ஊடகவியலாளர்களை விசாரணைக்குட்படுத்த வைப்பது ஏற்க முடியாத ஒரு விடயமாகும். பிழையான செய்திகளை வெளியிட்டால் ஊடக நிறுவனங்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கூடிய சட்டம் தான் இலங்கையில் இருக்கிறது.

இருந்தும் மட்டக்களப்பில் அவற்றிற்கு முரணாக சந்தேகத்தின் பேரில் பொலிஸ் முறைப்பாடு செய்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டமை இலங்கையில் எந்தளவில் ஊடக சுதந்திரம் இருக்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்நிலை தொடருமானால் மக்களை ஒன்று திரட்டி எதிராக ஆர்பாட் டத்தில் ஈடுபட வேண்டியது தவிர்க்க முடியாது என்பதனை தெரிவிக்க விரும்புகிறேன்.

வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்க ளுக்கு இந்நிலை தொடர்ந்தால் இது சம்பந்தமாக பாராளுமன்றத்திலும் கதைப்பதற்கு தயங்கமாட்டேன் என் பதை கூறிவைக்க விரும்புகிறேன் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply