ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தினரை கட்டுப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, அவரும் அவரது குடும்பத்தினரும் நாட்டின் அடிப்படை விழுமியங்களையே அழித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் குற்றம்சாட்டியுள்ள அக்கட்சி- ஜெயலலிதா குறித்து கட்டுரை பற்றி விசாரணை செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருப்பது வேடிக்கையானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்தலைமை யாரிடமுள்ளது? அதற்கான அமைச்சு பொறுப்பு யாரிடமுள்ளது? ஜனாதிபதி தன்னை தானே விசாரிப்பாரா? அல்லது தனது சகோதரரை விசாரிப்பாரா? என்றும் ஐ.தே.க கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் கொழும்பின் சில பெண்கள் பாடாசாலைகளுக்குள் தனது ரக்பி கழகத்திற்கு ஆதரவு சேர்ப்பதற்காக அத்துமீறி நடந்து அநாகரிகமாக நடந்து கொண்ட விதம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
















