மாங்காய் பிடுங்குவதற்கு வருமாறு இராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்ட எனது மகன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இராணுவமே எனது மகனை கடத்தியது . என குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் ஆணைக்குழு முன்னால் தைரியமாக சாட்சியம் அளித்தார். மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகளின் இறுதி நாள் பதிவு மடு பிரதேச செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது அதன்போதே மகனைக் காணாத தாய் ஒருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
அவர் மேலும் சாட்சியமளிக்கையில், இராணுவம் மாங்காய் ஆய்வதற்கு வருமாறு கூறியதாக எனக்கு கூறி விட்டு தனது நண்பனுடன் வீட்டில் இருந்து 17.11.2008 ஆம் ஆண்டு சென்ற எனது எனது மகன் பின்னர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. அதற்குப்பிறகு குஞ்சுக்குளத்தில் உள்ள இராணுவ முகாமிற்கு சென்று கேட்டோம்.
தாங்கள் பிடிக்கவில்லை விடுதலைப்புலிகள் பிடித்து செல்கின்றனர் என்று கூறினர். ஆனால் எமது கிராமத்தில் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தது எப்படி விடுதலைப்புலிகள் வரமுடியும். எனது பிள்ளையை இராணுவம் தான் பிடிச்சு கொண்டு போனது என்று எனக்கு நன்றாக தெரியும் இதற்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்று ஆணைக்குழு முன்னால் தாய் மேலும் சாட்சியம் அளித்தார்.
















