தாம் கேட்கும் போதெல்லாம் இந்தியாவிடம் இருந்து உதவிகள் கிடைப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், வெளிநாடுகளுடனான சிறிலங்கா இராணுவத்தின் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,
சிறிலங்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவின் ஒரு பகுதியாகவே, சிறிலங்காப் படையினரில் 80 வீதமானவர்களுக்கு இந்தியா பயிற்சிகளை வழங்குகிறது.
நாம் இந்திய இராணுவத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம்.
இந்தியா மிகவும் உதவியாக உள்ளது. எமது படையினருக்கான மேலதிக வெளிநாட்டுப் பயிற்சித் தேவைகளை நிறைவேற்றுகிறது.
பாகிஸ்தானும் கூட, சிறிலங்கா இராணுவத்துக்குப் பயிற்சி வசதிகளை வழங்கி வருகிறது.
எம்முடன் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
எமது அதிகாரிகளை கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள். கலந்துரையாடல்களுக்கு அமெரிக்க இராணுவம் அழைக்கிறது.
அவர்களின் நிகழ்வுகளில் நாம் தொடர்ந்து பங்குபற்றி வருகிறோம்.
சிறிலங்காவில் உள்ள ஏனைய பகுதிகளை விடவும், வடக்கு, கிழக்கில் உறுதியான நிலை உள்ளது.
அங்கு பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை.
ஆனால், விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும், சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த வெளிநாட்டில் உள்ள பிரிவனைவாத சக்திகள் இன்னமும் முயற்சிக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தினர் குறைக்கப்பட்டுள்ளனர்.
காத்திரமான புலனாய்வுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















