கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சிறய குளங்கள் வற்றியுள்ள நிலையில் நிலத்தடி நீரும் மிக வேகமாக குறைவடைந்து வருகிறது. கால்நடைகள் கூட குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாது அலைந்து திரிவதனையும் காணமுடிகிறது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, உள்ளுராட்சி சபைகள் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்ற போது நாளுக்கு நாள் புதிய புதிய பிரதேசங்களில் குடிநீர்த் தேவை ஏற்பட்டு வருகிறது. தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்;ட நான்கு இலட்சம் லீற்றருக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் குடிநீருக்கான பற்றாக்குறை தொடர்ச்சியாக காணப்பட்டே வருகிறது.
தற்போது நிலவும் வரட்சியான நிலைமை தொடர்ந்தும் சில மாதங்களுக்கு நிலவுமாக இருந்தால் நீர் தேவையை பூர்த்தி செய்வது என்பது மிகப்பெரும் நெருக்கடியாக மாறுவதோடு நோய்த்தாக்கங்களுகும் ஏற்படும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
















