முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்தில் பதில் பிரதேச செயலாளராக (தற்காலிகமாக) கடமையாற்றும் குருபரன் என்பவர், “SCIB” என்றழைக்கப்படும் விசேட குற்றப்புலனாய்வு விசாரணைப்பிரிவினரை பிரதேசசெயலகத்துக்குள் நேற்று (11.08.2014 அன்று) வரவழைத்து, அங்கு அவர்களுக்கு Room போட்டுக்கொடுத்து, அவர்கள் முன்பாக பிரதேச மக்களை நிறுத்தி விசாரணைகள் செய்து வருகின்றார்.
கற்சிலைமடு கிராம சேவையாளர் பிரிவில், பண்டாரவன்னி கிராம அபிவிருத்திச்சங்கத்தின் ஊடாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மலசலகூடங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள், முறைகேடுகள் சம்பந்தமாகவே அந்த “Roomக்குள்” விசாரணைகள் இடம்பெறுவதோடு, இவ்விடையம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பொதுமக்களிடம் வாக்குமூலங்களும் பெறப்படுகின்றன.
கிராம அபிவிருத்திச்சங்கமானது வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயல்படும் ஓர் நிர்வாக அலகாகும். எனவே நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் ஊடாக நிதி தணிக்கைக்குழு (Accounting audit team), முறைப்பாட்டு விசாரணைக்குழு (Complaints Inquiry) ஐ நியமித்து நடவடிக்கைகள் எடுக்காமலும், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அறிவிக்காமலும் (வடமாகாண உள்ளுராட்சி அமைச்சரும் விக்கியே ஆவார்.) குற்றப்புலனாய்வு பிரிவு ஊடாக விசாரணைகளை பிரதேசசெயலர் மேற்கொண்டு வருவது, அவர் தனது அதிகார வரம்பை மீறி ஏதேச்சதிகாரமாக செயல்படுவதையே சுட்டுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்துக்குள்ளும், அரச திணைக்களங்களுக்குள்ளும் இராணுவ தலையீடுகள் உண்டு என்பதற்கு இந்தச்சம்பவம் நல்லதொரு எடுகோளாகும். இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அவர்கள் என்ன பதில் கூறப்போகின்றார்?
-கழுகுகண்-
















