தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக்கொண்டாராம் சப்ரகமுவ தமிழ் மாணவன்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

question-markசப்ரகமுவ பல்கலைக் கழக மாணவன் தனக்குத்தானே காயம் ஏற்படுத்தியதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் காவலில் வைத்து வாக்குமூலம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண, மாணவர்களை வெளியேறுமாறு பல்கலைக் கழகத்தினுள் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் யார் என்பதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் வைத்து தாக்கப்பட்ட மாணவன் கடந்த சனிக்கிழமை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் பொலிஸ் ஊடகப் பேச்சாளரால் அறிக்கை யொன்று இந்தச் சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் விடுதியில் வைத்து முதலாமாண்டு மாணவரான முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்­ன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடந்த 28 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டது.

கடந்த 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில், தான் மலசலகூடம் சென்ற போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த இனந்தெரியாதோர் சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டபோது, தாக்குதலுக்கு உள்ளான மாணவன் குறித்து சந்தேகம் எழுந்தது. அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பான மாணவனின் கூற்றுக்கும் விடுதி பாதுகாவலர்களின் கூற்றுக்கும் வேறுபாடு காணப்பட்டது.

அதனால் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பல்கலைக்கழக விடுதிகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களுக்கிடையில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அந்த மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். இதன்போது, தனக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் தன்னாலேயே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவை என்றும் தான் முகமாலையைச் சேர்ந்தவர் என்பதால், இவ்வாறான சம்பவமொன்றின் மூலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அம்மாணவன் தெரிவித்துள்ளார்.

அம்மாணவனின் இந்த வாக்குமூலத்தை அடுத்து, காயங்கள் ஏற்படுத்திக்கொள்ளப் பயன்பட்ட பிளேட், பொல்லு, வயர் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, குறித்த மாணவன் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் முன்னிலையில் வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டார். இதன்மூலம், அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்கள் அவராலேயே ஏற்படுத்தப்பட்டன என்பது உறுதியானது.

இவ்வாறான பொய் முறைப்பாடுகள் காரணமாக, வடக்கு கிழக்கு மாத்திரமன்றி அனைத்து பிரதேசங்களிலுமுள்ள தமிழ் மாணவர்கள் மத்தியில் அமைதி சீர்குலைந்துள்ளது.

இதனால், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் மாணவன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார், என்று பொலிஸ் பேச்சாளர் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறுமாறு சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் யார் என்பது தொடர்பிலேயே, சுதர்­ன் மீது தாக்கியவர் என்ற சந்தேகத்தில் மற்றொரு தமிழ் மாணவனான நிரோயன் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயோ, அவர் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயோ பொலிஸ் பேச்சாளரின் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பொலிஸ் அறிக்கையை
நிராகரிக்கின்றோம்

அதேவேளை, பொலிஸ் பேச்சாளரின் அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தமிழ் சிங்கள பல்கலைக்கழக மாணவர்களிடையில் மோதலை உண்டுபண்ணுவதற்காக அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மூடிமறைக்கவே, தன்னைத் தானே மாணவன் தாக்கிக் கொண்டதாக வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார் இவ்வாறு அனைத்திலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ‘உதயனுக்குத்’ தெரிவித்தனர்.

“பொலிஸ் பேச்சாளரின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம். இலங்கை அரசினால், பல்கலைக்கழக தமிழ் d சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதலை உண்டுபண்ணுவதற்காகவே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

அதற்கு முன்னோடியாகவே அங்கு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் சுதர்­ன் என்ற மாணவன் 27 ஆம் திகதி அதிகாலையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

ஒருவர் தனக்கு தானே எப்படித் தாக்க முடியும். அதுவும் அவரது வாயை மூடிக்கட்டி, கழுத்தை வயறினால் நெரித்து, தனக்குத்தானே எவ்வாறு தாக்கிக் கொள்ள முடியும். எனவே அவர் தனதுக்குத் தானே தாக்கிக் கொண்டார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பதன் மூலம் அரசின் மோதல் முயற்சிகளை மூடி மறைக்க முயல்கின்றார்.

மேலும் குறித்த மாணவன் தாக்கப்பட்ட பின்னர், அதே பல்கலைக் கழகத்தில் பயின்ற மற்றுமொரு தமிழ் மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அதனையடுத்து எம்மால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பையும் நாம் நடத்தியிருந்தோம்.

இதன் பின்னர் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளராகிய எமது ஒவ்வொருவரது வீட்டுக்கும் இனந்தெரியாத நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தப் பின்னணிகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, தமிழ் மாணவன் மீது நடத்தப்பட்டது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெளிவாகின்றது. இதனடிப்படையில் நாம் பொலிஸ் பேச்சாளரின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம். என்று தெரிவித்தனர் அனைத்திலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்.

Tags: , ,

Leave a Reply