இளையராஜா பிஸியாக இருந்த காலகட்டத்தில் அதிகம் பேச மாட்டார்.
மௌன சாமியாராக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்.
அப்படிப்பட்ட இளையராஜாவிடம் அண்மைக்காலமாக பெரிய மாற்றம்.
திரைப்பட விழாக்களுக்கு வந்தால் நிறைய பேசுகிறார். அவரது பேச்சில் நிறைய நக்கல்களும் குத்தல்களும் தென்படுகின்றன.
அஸ்வின், சிருஷ்டி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரது நடிப்பில் 22ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ‘மேகா’ படத்தின் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தார் இளையராஜா.
“முதல்ல என்கிட்ட வாய்ப்பு கேட்டு வரப்போ ஒரு மாதிரி இருப்பாங்க. வளர்ந்த பிறகு வேற மாதிரி ஆயிடுறாங்க. அது பற்றி எனக்கு ஒரு வருத்தமும் இல்லை; குறையும் இல்லை. அவன் பிரம்மாவாவே இருக்கட்டும், நமக்கு என்ன நஷ்டம்” என்று எடுத்த எடுப்பிலேயே வைரமுத்துவை வறுத்தெடுத்தார்.
தொடர்ந்து பேசிய இளையராஜாவின் சாட்டை பாரதிராஜாவை விளாசித்தள்ளியது…
“பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படம் எடுத்துட்டு வந்து, போட்டு காட்டினப்போ, எனக்கு அந்தப் படம் பிடிக்கவே இல்லை. கிளம்பிப் போயிட்டேன். ‘என்ன படம் பாத்துட்டு ஒண்ணுமே சொல்லாம போயிட்ட?’ என்று பாரதிராஜா கேட்டபோது, ‘படம் எனக்கு பிடிக்கவில்லை’ என்று சொல்லி விட்டேன்.
பிறகு, பின்னணி இசை வேலைகள் ஆரம்பிச்சோம்.
எனக்கு படம் பிடிக்கவில்லை என்பதால் அமைதியாக இருந்தார் பாரதிராஜா. கடைசி ரீலுக்கு முன்னாடி ஜெயில் காட்சிக்கு பின்னணி இசை முடித்துவிட்டு,‘இங்கே வா.. வந்து பார்’ என்று கூறினேன். பின்னணி இசையுடன் காட்சியைப் பார்த்த பாரதிராஜா என் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர்விட்டு அழுதார்.
‘உனக்கு படம் பிடிக்காமலேயே இப்படி பண்ணியிருக்கியே’ என்று கண்ணீரோடு கேட்டார் பாரதிராஜா.
“படம் பிடிச்சி இருந்தாலும் இப்படிதான் பண்ணியிருப்பேன். படம் எனக்கு பிடிக்குது, பிடிக்கல என்பது என்னோட பெர்சனல். ஆனால், இசை என் சரஸ்வதி. நான் என் தொழிலுக்கு துரோகம் பண்ண மாட்டேன். நான் கூப்பிட்டதும் ஓடி வருதே, ஏழு ஸ்வரங்கள்… அதுக்கு துரோகம் பண்ண மாட்டேன்”
என்று ப்ளாஷ்பேக் சொன்ன இளையராஜா, தமிழ்ப்படங்களின் தரம் குறித்து ஒரு தகவலையும் சொன்னார்.
அப்படி என்ன சொன்னார் இளையராஜா?
“நீங்கள் ஒரு தடவை பார்த்துவிட்டு ‘த்தூ’ என்று துப்பிய படங்களை எல்லாம் நான் நாலு தடவை பார்த்து, பின்னணி இசை பண்ணியிருக்கேன். ஏன்னா, ஒரு தடவை பின்னணி இசை இல்லாமல் பார்ப்பேன். அடுத்து, ரீ-ரிக்காடிங் பண்ணும்போது பார்ப்பேன். இப்படி நாலு தடவை பார்ப்பேன். அப்படி என்றால் என்னைப் போல பொறுமைசாலி இந்த உலகத்தில் எவனாவது இருக்கானா?”
இளையராஜா சொன்ன இந்த விஷயத்தை ஒவ்வொரு இயக்குநர்களும் மண்டைக்குள் போட்டுக் கொண்டால் ஒருவேளை தமிழ்சினிமா உருப்படக்கூடும்.
















