வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படை வீரர் இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முற்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான எம். கே. சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் ஆகியோர், இதுபோன்ற அராஜகங்களைத் தடுப்பதற்கு மக்கள் குடியிப்புகளுக்கு நடுவிலுள்ள இராணுவம் மற்றும் கடற்படை முகாம்களை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற முனைப்புக்கள் தொடருமாயின் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக பிரதேச ரீதியாக தொண்டர்படைகளை உருவாக்கவேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படைவீரர் நேற்று அதிகாலை அத்துமீறி உட்பிரவேசித்தமை தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்று நேரடியாக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக குறித்த இரு மாகாண சபை உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணி என்ற இடத்தில் பரமேஸ்வரா பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள கடற்படை முகாமில் கடமையாற்றுகின்ற கடற்படைச் சிப்பாய் ஒருவர் அருகிலுள்ள வீடொன்றிற்குள் நேற்று அதிகாலை அத்துமீறி உட்பிரவேசித்துள்ளார். இவர் அவ் வீட்டில் வசித்த இரு பிள்ளைகளின் தாயாருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டுள்ளார்.
குறித்த தாயார் எழுப்பிய கூக்குரலில் விழிப்படைந்த அயலவர்களின் உதவியுடன் இக்கடற்படைச் சிப்பாய் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படடுள்ளார்.
அண்மையில் கடற்படையினர் காரைநகர் பகுதியிலும் இதுபோன்ற முறைகேடான செயல்களைச் செய்துள்ளனர்.
கடற்படையின் இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கன.
இதுபோன்ற சம்பவங்கள் தொடருமாயின் எமது இளைஞர்களை ஒன்றிணைத்து தொண்டர்படைகளை உருவாக்கவேண்டிய சூழல் எமக்கு ஏற்படலாம்.
எனவே இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள இராணுவ, கடற்படை, விமானப்படை முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
















