அரசியலுக்கு வந்து நஸ்டப்பட்டு விட்டேன். ஜி.ரி.லிங்கநாதன் புலம்பல்!

linganathanவவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக எரிபொருள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் விவசாயிகளும், வாகன உரிமையாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை நீங்கள் யாவரும் அறிந்ததே.

அப்பிரதேசத்தில் நிலவி வரும் எரிபொருள்கள் தட்டுப்பாடுக்கு காரணம், அப்பிரதேசத்துக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் (Dealer) ஜி.ரி.லிங்கநாதன் (வடமாகாணசபை உறுப்பினர்) எரிபொருள்களை கொள்வனவு செய்யாமையே ஆகும். இது தொடர்பில் ஜி.ரி.லிங்கநாதன் தனது நலன் விரும்பிகளிடம் கூறியதாவது,

வங்கி மனேஜர் சொன்னதே நடந்தது!

மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எனது பெயர் அடிபட்ட போதே, இலங்கை வங்கி கிளையில் மனேஜராக கடமையாற்றும் எனது நண்பர் அழைத்து, “லிங்கம் வேண்டாம். தேவையில்லாத வேலை பார்க்கிறாய். பணத்த கொட்டி செலவழிச்சு இதுக்குள்ள போய் அங்க நீ ஒண்டும் பெரிசா எதையும் சம்பாதிக்கப்போறதில்ல. வீண் வேலை. பேசாம உன் பிசினஸ்ஸ பார். ஏதோ என் அறிவுக்குப்பட்டத சொல்லுறன். இனி நீயாய்ச்சு. உன் முடிவாய்ச்சு என்று அப்பவே படிச்சுப்படிச்சு சொன்னார். நான் தான் கேட்கல. இப்ப மனேஜர் என்ன சொன்னாரோ அது தான் நடந்திருக்கு.”

தொடர்புடைய செய்தி:

நெடுங்கேணியில் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு! மக்கள் பாதிப்பு!

வடக்கு மாகாணசபையின் உறுப்பினரும், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், ஒரு வருடத்துக்கு முன்னர் நெடுங்கேணி நகரப்பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை நிறுவி (Ceypetco Dealer) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதி அமைச்சரை அழைத்து வந்து அதனை கோலாகலமாக திறந்து வைத்தார்.

“ஆல் இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை” ஆக அமைந்த குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தை, நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் மற்றும் நெடுங்கேணி ஊடாக முள்ளியவளை பிரதேசங்களை நோக்கி பயணிக்கும் வாகனங்களும், நெடுங்கேணி பிரதேச மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடந்த 45 நாள்களாக டீசலும், 15 நாள்களாக பெற்றோலும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மண்ணெண்ணை மட்டும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இன்னும் சில நாள்களில் மண்ணெண்ணெய்யும் தீர்ந்து விடும் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளரான ஜி.ரி.லிங்கநாதன் எரிபொருள்களை கொள்வனவு செய்யாமையே தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் எனவும் மக்கள் குற்றம் தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தையே தமது வாழ்வாதாரத்தொழிலாக நம்பியுள்ள இப்பிரதேசத்தில் டீசல், மண்ணெண்ணை, பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் விவசாயிகளும், வாகன மற்றும் இயந்திர உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள்களை கொள்வனவு செய்வதற்கு 40-50 கிலோமீற்றர்களுக்கு அப்பால் வெளிப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளதாகவும், தாம் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்தை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விரைந்து மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜி.ரி.லிங்கநாதனை கடந்த ஒன்றரை மாதங்களாக நெடுங்கேணி பிரதேசத்தில் காண முடியவில்லை என்றும், மக்கள் அவரை சந்தித்து தமது அத்தியாவசிய பிரச்சினைகளை கூற முடியாதுள்ளதாகவும், அவரின் +094 773236357 எனும் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினால் Switch off என்ற பதிலே தொலைபேசி சேவை வழங்குநர் வலையமைப்பிடமிருந்து கிடைப்பதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைந்துள்ள பகுதியில் தனியார் கடைகள் எரிபொருள்களை சில்லறை வாணிபம் செய்ய முடியாது எனும் கட்டுப்பாடு நடைமுறையிலுள்ள சூழலில், கட்டுப்பாட்டை மீறி விற்பனை செய்தவர்கள் மீது பொலிஸாரை கொண்டு சட்ட நடவடிக்கை எடுத்து தண்டப்பணம் அறவிட வைத்த லிங்கநாதன் அவர்களே,

மாகாணசபை ஊடாக எதனையும் செய்ய முடியவில்லை என்று புலம்பும் நீங்கள், உங்கள் சொந்த வியாபாரம் ஆன எரிபொருள்கள் விற்பனையையாவது சீர் வர செய்து மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளலாம் அல்லவா? என்று நெடுங்கேணி பிரதேச மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

Tags: ,

Leave a Reply