இந்தியாவின் 68 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடுவதை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலம், மற்றும் இராமேஸ்வரம் கோவில் பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர தின இன்று கொண்டாடப்படும் நிலையில் நாச வேலைகளில் தீவிரவாதிகள் ஈடுபடக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் அருகில் இலங்கை இருப்பதால் இந்திய கடற்பகுதியில் இந்திய கடற்படை, கடலோரகாவல்படை, தமிழக கடலோரபாதுகாப்பு குழும காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் கண்காணித்தும், கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவரையும் மெட்டேல் டிடக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறையினர் துப்பாக்கியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலத்தின் வழியாக அன்னிய நபர்கள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இராமநாதபுரம், இராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம், பரமக்குடி ரயில்வே நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமாக இருப்பவர்களை பொலிஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
















