மும்பையில் சூர்யா- வித்யூத் ஆகிய இரு நண்பர்களும் மாஃபியா கூட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரையும் பார்த்தால் மும்பையே நடுங்குமாம். சூர்யா கேங்கை சேர்ந்த சிலரை மும்பை போலீஸ் கமிஷனர் கைது செய்ததால் அவரை மிரட்ட அவரது மகள் சமந்தாவை கடத்துகிறார் சூர்யா. பின்னர் கடத்தப்பட்ட சூர்யா ஆட்களை போலீஸ் விடுதலை செய்ததால் சூர்யாவும் சமந்தாவை நல்ல முறையில் திருப்பி அனுப்புகிறார். இந்த இடைவெளியில் சூர்யாவுக்கு சமந்தாவுக்கும் இடையே காதல் உண்டாகிறது.
இந்நிலையில் எதிர்கோஷ்டி மாபியா கேங் சூர்யாவின் நண்பர் வித்யூத்தை கொலை செய்ய, அவர்களை பழிவாங்க துடித்து காரில் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத டுவிஸ்ட்டில் அவரது கூட்டாளியே சூர்யாவை சுட்டு விடுகிறார். குண்டடிபட்டு பாலத்தில் இருந்து தண்ணீரில் விழும் சூர்யா, என்ன ஆனார்? சூர்யாவை கொலை செய்தது யார்? எதிர்கோஷ்டி வில்லனா? அல்லது போலீஸ் கமிஷனரின் ஆளா? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கிறார் கன்னியாகுமரியில் இருந்து மும்பை வரும் தம்பி சூர்யா. அவர் என்ன கண்டுபிடித்தார் என்பதே இரண்டாம் பாதி கதை. இதற்கிடையில் சிலபல டுவிஸ்ட்டுகளும் படத்தில் உண்டு.
எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்தே வரும் அரதப்பழசான கதை. இந்த கதையில் நடிக்க எப்படி சூர்யா ஒப்புக்கொண்டார் என்றே தெரியவில்லை. இருந்தாலும் இண்டர்வல் வரை படம் ஓகே. கிட்டத்தட்ட சொல்லவந்த கதை முதல் பாதியிலேயே முடிந்துவிடுகிறது. அதன்பின்னர் படத்தை தேவையில்லாமல் இழு இழுவென்று இழுத்து ரசிகர்களை நோகடித்துள்ளார் லிங்குசாமி.
படத்தில் கதாநாயகன் யார்? கதாநாயகனுக்கு நண்பர் யார்? என்பதே குழப்பமாக உள்ளது. வித்யூத்தை பார்த்தால் ஹீரோ மாதிரியும், சூர்யாவை பார்த்தால் ஹீரோவுக்கு நண்பன் என்றும்தான் நினைக்க தோன்றுகிறது. ஆனால் சூர்யாவை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காகவே வித்யூத்தை சில காட்சிகளில் வேண்டுமென்றே லிங்குசாமி மட்டம் தட்டியிருக்கிறார்.
மகள் சமந்தாவை கடத்தியவனை சும்மா விடமாட்டேன் என கர்ஜிக்கும் மும்பை போலீஸ் கமிஷனரை இடைவேளைக்கு பின்னர் ஆளையே காணும். அவர் எங்கே போய் சூர்யாவை தேடிக்கொண்டிருக்கிறார் என்பதை லிங்குசாமி தனது அடுத்த படத்திலாவது விளக்குவாரா? என்று பார்ப்போம்.
மும்பையில் சூர்யாவுக்கு எதிராக கேங்க்ஸ்டார் தலைவனாக வரும் வில்லன், மனோபாலாவைவிட ஒல்லியாக, பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கின்றார். இவரை போய் மெயின் வில்லனாக நடிக்க வைக்கும் ஐடியாவை லிங்குசாமிக்கு யார் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை.
தம்பியாக வரும் சூர்யாவின் நடிப்பு ஓகே. மற்றபடி கேங்க்ஸ்டார் கேரக்டர்க்கெல்லாம் ஒரு பாடி லாங்க்வேஜ் வேண்டும். பாட்ஷாவில் ரஜினி, நாயகனில் கமல், போக்கிரியில் விஜய் காட்டிய ஆக்ரோஷம் இந்த படத்தில் மிஸ்ஸிங். கேங்ஸ்டார் வேடம் சூர்யாவுக்கு சுத்தமாக பொருந்தவே இல்லை.
படம் முழுவதும் கவர்ச்சியில் வரும் சமந்தா, படத்தின் ப்ளஸ். அதுவும் டூ பீஸில் ஸ்லோமோஷனில் சமந்தா வரும் காட்சியில் ஜொள்ளுவிடாதவர்களே இல்லை எனலாம். மற்றபடி நடிப்பு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. அதை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை.
படத்தின் திரைக்கதை படு சொதப்பல். லிங்குசாமியா இப்படி என்று நினைக்க் வைக்கின்றது. இப்பொழுதுள்ள இளையதலைமுறை இயக்குனர்கள் அளவுக்கு அவரால் சிந்திக்க முடியவில்லை. டெக்னாலஜி மூலம் பல வில்லத்த்னம் செய்யும் படங்கள் வெளிவந்துகொண்டு இருக்கும் தற்போதைய காலகட்டத்தில் இன்னும் கேங்ஸ்டார், துப்பாக்கி, ஆள் கடத்தல், கொலை என்று எத்தனை படங்களைத்தான் பார்ப்பது. இரண்டு சூர்யாவும் ஒன்றுதான் என்பதை எல்.கே.ஜி குழந்தைகூட கண்டுபிடித்துவிடும். இதை என்னவோ பெரிய டுவிஸ்ட் போல இயக்குனர் க்ளைமாக்ஸ்லில் ஓப்பன் செய்வது தான் பெரிய காமெடி. லிங்குசாமி இனிமேல் படங்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தலாம்.
யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையில் ஒரு கேங்ஸ்டார் படத்திற்கு உண்டான மிரட்டல் இசை இல்லை. பில்லா, பில்லா 2 போன்ற படங்களில் பின்னணி இசைதான் படத்தை தூக்கி நிறுத்தும். அதை செய்ய தவறியுள்ளார் யுவன். இரண்டு குத்துப்பாடல்களுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு. மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. படம் ஓடாது என்று முன்பே சந்தோஷ்சிவனுக்கு தெரிந்துவிட்டதா? அவர் கூட இந்த படத்தில் ஏமாற்றியிருக்கிறார். ஒரு நல்ல கேங்க்ஸ்டார் கதையை, படு சொதப்பலான திரைக்கதை மூலம் பாழாக்கியிருக்கிறார் லிங்குசாமி.
நோஞ்சான் இருக்கும் இருக்கும் சூர்யாவை அஞ்சானாக காட்ட முயற்சி செய்துள்ளார் லிங்குசாமி. படம் கண்டிப்பாக தேறாது.
















