இலங்கை சிறையில் இருந்து விடுதலையான இராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் சொந்த ஊரை சென்றடைந்துள்ளனர். கடந்த மாதம் 22 ம் திகதி இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களையும் அவர்களது 4 படகுகளில் தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்தியாவின் சுததந்திர தின விழாவையொட்டி நல்லிணக்க அடிப்படையில் 20 மீனவர்கள் ஜனாதிபதியின் உத்தரவில் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை மண்டபம் கடலோரகாவல்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாப்புதுறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மீனவர்கள், கடந்த 22 ம் திகதி மீன்பிடிக்கச் சென்ற எங்களை நடுக்கடலில் கைது செய்த இலங்கை கடற்படையினர் தங்களது படகை முட்டி சேதப்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், நம் நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி நேற்று விடுதலை செய்ததாக தெரிவித்தனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் விடுதலையான மீனவர்கள் தெரிவித்தனர்.
இதே போல இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மீனவர்கள் 74 பேர் காரைக்கால் துறைமுகத்திற்க்கு சென்றடைந்தனர். மேலும் இலங்கை கடற்படையால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட 62 படகுகளை மீட்க வேண்டும் என தமிழக மீனவர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















