இயக்குனர் ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சை என்றுதான் அர்த்தம் என்று கூறும் அளவுக்கு பல சர்ச்சைக்கருத்துக்களை தெரிவித்தவர் என்ற பெருமைக்கு உரியவர். இவருடைய டுவிட்டரில் திடீர் திடீரென சர்ச்சைகள் தோன்றி பல கலகங்களை உண்டாக்கும். இதுபோலவே இன்று ஒரு புதிய சர்ச்சையை ஆரம்பித்துவைத்துள்ளார் ராம்கோபால் வர்மா.
ராம்கோபால் வர்மா, இன்று தனது டுவிட்டரில் தனது அடுத்த படத்தின் பெயர் “KCR” என்று அறிவித்துள்ளார். அதோடு விட்டுவிட்டால் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் “KCR” என்பவர் NTR ஐ விட சக்தி வாய்ந்தவர் என்று கூறியிருப்பதுதான் சர்ச்சைக்கு காரணம். தற்போது தெலுங்கானா முதல்வராக இருக்கும் சந்திரசேகரராவை அனைவரும் “KCR” என்றுதான் அழைப்பார்கள். அதுபோல என்.டி.ராமராவை NTR என்று அழைப்பார்கள் என்பதை அனைவரும் அறிவோம். தற்போதைய தெலுங்கானா முதல்வர் முந்தைய ஆந்திர முதல்வரை விட சிறந்தவர் என்று கூறும்வண்ணம் அவருடைய கருத்து இருந்ததாக கூறப்படுவதால் NTR ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
மேலும் தமன்னா, இலியானா, மற்றும் சமந்தா ஆகிய மூன்று பேர்களின் அழகை ஒன்று சேர்த்தால்கூட “KCR” அவர்களின் அழகுக்கு ஈடாகாது என்று கூறியுள்ளார். இதனால் இவர் தெலுங்கானா முதல்வரை உண்மையிலேயே பாராட்டுகின்றாரா? அல்லது கலாய்க்கின்றாரா? என்று புரியாமல் தெலுங்கானா கட்சியினர்களே குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த பிரச்சனை விரைவில் பூதாகரமாக வெடிக்கும் என கூறப்படுகிறது.
















