ஒருமைப்பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்

Togetherஇந் நிகழ்வுதான் இன்று எம் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ‘ஒருமைப்பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும் ‘ ‘ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ‘ இவை வெறுமனையே ஒரு பழமொழிகள் அல்ல, வெற்றிப்பெற்ற நடைமுறைத் தத்துவங்களாகும். ஒற்றுமை என்பது தனிமனித வாழ்வுக்கு மாத்திரமன்றி, நாட்டு மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் அடி நாதமாகும்.

எமது தாயக மக்களினதும், புலம்பெயர் வாழ் மக்களினதும் ஏக்கங்களும் தவிப்புகளும் இன்று இதுவாகவே இருக்கின்றன. யாரோடு பேசினாலும் ‘இவங்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டாங்கள், எங்கடை சனம் தான் அழிந்துகொண்டிருக்கிறது ‘ இவைதான் வெளிவரும் வார்த்தைகளாக இருகின்றன.

உண்மையைத்தான் மக்கள் பேசுவார்கள். பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘ ஒற்றுமை என்பது வேறும் பேச்சினால் உருவாகாது, செயலினால் தான் உருவாகும். செயல்பாடில்லாத பேச்சு வெறும் முட்டைக்கோது போன்றதே’ இன்றும் நாம் பல பிரிவுகளாகப் பிரிந்து நின்று செயல்படுவதன் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்ததா? முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெற்று ஐந்து வருடங்கள் முடிந்த நிலையிலும் கூட எமது மக்களின் அவல வாழ்வுக்குத் தீர்வு கிடைத்ததா? மக்களின் வாழ்வு இராணுவ எதோச்சதிகாரத்தின்பிடியில் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறது. வாழ்வுக்கு அடிப்படையான அரசியல் அதிகாரம்கூட சிங்களக்குடியேற்றத்தின் மூலம் சிங்கள அரசியல்வாதிகளின் கைகளுக்கு மாறும் அவலம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில் எமது தாயகத்தை எமது நாடு என்று கூட சொல்லமுடியாத அளவுக்கு சிங்கள இராணுவத்தின் செயல்பாடுகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள தலைமைகளாலோஇ புலம்பெயர் தலைமகளாலோ இவைகளைத் தடுத்து நிறுத்த முடிகிறதா?

புலம்பெயர் நாடுகளில் வாழும் எமக்கு உயிராபத்து இல்லை. ஆனால் தாயகத்தில் வாழும் மக்களின் நிலை வேறு. ஒவ்வொருவரும் உயிருக்குப் பயந்த நிலையிலையே நாட்களை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள தலைமையின் நிலையும் இதுவாகவே இருக்கிறது. உயிருக்குப் பயந்த நிலையிலையே எதுவும் செய்ய முடியாது செயலற்று உள்ளார்கள். இராணுவ ஆதிக்கத்தில் உள்ள மக்கள் மத்தியில் ஜனநாயகரீதியான போராட்டங்களை நடத்துவதற்குக் கூட உயிரை அர்ப்பணிக்கக் கூடிய துணிவான தலைமையும் தொண்டர்களுமே தேவை. இத்தகைய துணிவான தொண்டர்களும் மக்களும் எம் மக்கள் மத்தியில் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதற்கு கடந்த கால வரலாறே பதில் கூறும். உயிரை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான போராளிகளும், துணிவுடன் தியாகம் செய்த மக்கள் கூட்டமுமே இதற்கு சாட்சியமாகும். தியாகம் செய்யக்கூடிய துணிவான தலைமை இருக்குமானால் துணிவான தொண்டர்களும், மக்களும் அணி திரளுவார்கள் என்பதே உண்மையாகும்.

நாம் பிரிந்து நின்று செயல்படுவது என்பது தெரிந்தோ தெரியாமலோ ஒரு எதிரியின் நிகழ்ச்சி நிரல் தான். இதனால் எம்மால் எதோ சிலவற்றைச் செய்ய முடியுமேயொழிய முழமையாக எதையும் செய்யமுடியாது. எமது இந்த அவல வாழ்வுக்கு ஒற்றுமையின்மையே உண்மையான காரணமாகும். எதிரியோடு இருக்கும் கைக்கூலிகளைப் பற்றி நாம் கவலைப் படத்தேவையே இல்லை அவர்களை மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை தேர்தல் அரங்குகளில் எப்போதும் நிராகரித்தே வந்திருக்கிறார்கள்.

இன்றைய சர்வதேச அரசியல் நிலை எமக்குச் சாதகமாகவே மாறிவருகின்றன. உலக நிகழ்ச்சி நிரல்கள் எமக்கெனத் தனியாக மாற்றமடையாது. அதற்கேற்றவாறு எமது நிகழ்ச்சி நிரல்களின் நடைமுறைகள் தான் மாற்றமடைய வேண்டும். இதன் அர்த்தம் எமது கொள்கையை விட்டுக்கொடுப்பதல்ல. உலக நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப எமது நடைமுறைகளை மாற்றி இலக்கை அடையவேண்டும் என்பதேயாகும். ஆயுதப்போராட்டத்தை நடைமுறையாகக் கொண்ட எமது தலைவர் ஜனநாயகரீதியான தேர்தல் நடவடிக்கையில் பங்குபற்றவில்லயா? அகிம்சைப் போராட்டமான உண்ணாவிரத்தில் பங்குபற்ற வில்லையா? இது போன்று எமது நடைமுறையில் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு தனி மனித வாழ்வானாலும் சரி, ஒரு நாடாக இருந்தாலும் சரி உலக உறவு இல்லாது வாழமுடியாது என்பதே யதார்த்தமாகும்.

வெளிநாடுகள் எமக்கு உதவும், ஐ நா சபை எமக்கு உதவும் என எதிர் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. இவை அனைத்தையும் எமக்கு ஆதரவாக மாற்றுவதற்கு வேலை செய்ய வேண்டுமேயொழியஇ முழுமையாக நம்பிவிடக் கூடாது. இதற்குக் கூட ஒற்றுமைதான் உயிர் கொடுக்கும்.

இன்று இந்தியாவில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்ப்படுத்துவதற்கு தாமதமில்லாது நடவடிக்கை எடுக்கவேண்டும். எம். ஜி. ஆரின் அரசுக்குப் பின் தமிழ் நாட்டில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் எம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

புலம்பெயர்நாடுகளில் இராசதந்திர மட்டத்திலும் நாம் முழுமையாகவும் அவசரமாகவும் வேலைகள் செய்யவேண்டும். அரசியலும் இராசதந்திரமும் ஒன்றோடுஒன்று பின்னிப் பிணைந்தவையே. இவை இரண்டும் இணையாமல் எதையும் வெற்றிகொள்ள முடியாது. இராசதந்திர வேலைகளை எல்லோரும் செய்துவிட முடியாதுஇ அதற்குரியவர்களை இனம்கண்டு இணைந்து வேலை செய்யவேண்டும்.

இவை அனைத்திற்கும் இன்று எமக்குத் தேவையானது ஒற்றுமையான செயல்பாடு ஒன்றே. ஒன்றாகச் சேர்ந்து நாம் அவசரமான பல நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எமது மக்களின் வாழ்வு அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். தமிழ்ப்பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்களை உடன் நிறுத்தப்படவேண்டும், இராணுவம் தமிழ்ப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்இ அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை உடன் நிறுத்தப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து ஜனநாயகரீதியான போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்த வேண்டும். அண்மையில் 4.7.2014ல் கிளிநொச்சியில் அம் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியும்இ தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் ஒற்றுமையாக நடாத்திய போராட்டத்தைப் போன்று மக்களின் பிரச்சனைகளை இனம்கண்டு அனைத்து இடங்களிலும் ஜனநாயகரீதியான போராட்டங்களை நடாத்த வேண்டும்.

இவை அனைத்தையும் நாம் ஒன்றுபட்டால்தான் வெற்றிகரமாகச் செய்யமுடியும். ஒன்றுபட முடியாததற்கு காரணங்களைக் கூறிக் காலம் கடத்துவதை விடுத்து, தூய மனதோடும் துன்பப்படும் எமது மக்களை மனதில் கொண்டும் தாமதமில்லாது ஒன்று சேருவோம். ஒன்றுபட்டு நாம் சாதித்தவைகளை முன்னுதாரணமாகக் கொள்வோம். தந்தை செல்வாவில் இருந்து தலைவர் பிரபாகரன் காலம் வரை ஒன்றுபட்டு சாதித்தவைகள் எம் கண்முன்னாலே சாட்சிகளாக உள்ளன. நேர்மையான உண்மையான செயல்பாட்டாளர்கள் நிச்சயமாக ஒன்று சேர்வார்கள். ஒன்று சேருவோம். வெற்றிபெறுவோம்.

-மாறன், 10.7.2014

Tags: ,

Leave a Reply