புங்குடுதீவு வைத்தியசாலைக்கு, “மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி (Scanning Machine)” வழங்கும் நிகழ்வு..!

pungudu-1புங்குடுதீவு வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக ஒரு “மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி (Scanning Machine)” அவசியத் தேவையாக விருப்பதாகவும், அதனைப் பெற்றுத் தருமாறும், புங்குடுதீவு வைத்தியசாலையின் வைத்தியர் திரு.சரவணபவன் அவர்கள், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலுள்ள புங்குடுதீவு ஒன்றியங்கள் மற்றும் தனிப்பட்ட சிலரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவ்விடயத்தினைக் கவனத்திற் கொண்ட புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி கனகரட்ணம் கனகம்மா அவர்களது குடும்பம் சார்பாக அவர்களின் பிள்ளைகளான சுவிஸ்லாந்தில் வசிக்கும் திருவாளர்கள் “திரு, அருள், ரவி” மற்றும் இலங்கையில் வசிக்கும் “அப்பன்” ஆகியோர் இணைந்து இந்த சுமார் பத்தொன்பது (19) இலட்சம் ரூபா பெறுமதியான “மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியினை (Scanning Machine)” மிகவிரைவில் வழங்க இருப்பது குறித்து நாம் செய்தி வெளியிட்டு இருந்தது நீங்கள் அறிந்ததே..

நாம் ஏற்கனவே அறிவித்திருந்தது போன்று புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கடந்த 15.08.2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30மணியளவில் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி கனகரத்தினம் கனகம்மா குடும்பத்தின் சார்பில் அவர்களின் இளையமகன் “அப்பன்” எனும் திரு.ரகுநாதன் மற்றும் அவரது பாரியார் உஷா ரகுநாதன் ஆகியோரினால் மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி நன்கொடையாக வழங்கப்பட்டது.

pungudu-2இந்நிகழ்வில் திருமதி உஷா ரகுநாதன், உயிரியல் வைத்தியப் பொறியியலாளர் திருமதி சாந்தி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவவியல் நிபுணர் டொக்டர் சரவணபவன், சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் குணதாசன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர்.

நிகழ்வில் பங்கேற்றிருந்த தொழில்நுட்பவியலாளர் மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கிக் கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவவியல் நிபுணர் டொக்டர் சரவணபவன் அவர்கள் சிகிச்சைக்காக காத்திருந்த கர்ப்பணித் தாய்மார்களின் வைத்திய நடவடிக்கை கருதி மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியை பரிசோதித்தார்.

இந்நிகழ்வில் உயிரியல் வைத்தியப் பொறியியலாளர் திருமதி சாந்தி, சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் குணதாசன், மகப்பேற்று வைத்திய அதிகாரி டொக்டர் குமாரவேல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவவியல் நிபுணர் டொக்டர் சரவணபவன், புங்குடுதீவு வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரி,
மருத்துவ தலைமைத் தாதி மற்றும் தாதிமார், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தகவல்:
சுவிஸ் ரஞ்சன்,
ஊடகப் பொறுப்பாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து.
19.08.2014.

Tags: ,

Leave a Reply