வேட்பாளர் பொதுவா? – எதிர்பார்ப்பு வெள்ளை​யா? என்ற தலைப்பில் சிறீலங்காவில் இடம்பெற்ற கருத்தரங்கின் சுருக்கம்!

speach-lkதற்போது நாம் கடந்து கொண்டிருக்கும் காலம் இனவாதம், மதவாதம்,வர்க்கவாதம் எழுச்சி பெற்றுள்ள சந்தர்ப்பமாகும். இந்த நிலைமைகளின் மத்தியில் ஐனாதிபதி தேர்தல், பொதுவேட்பாளர், கட்சி சார்பற்ற வேட்பாளர், போன்ற பேச்சுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இது வரைகாலமும் மறைந்து மறைந்து அரசியலில் ஈடுபட்டவர்கள் இன்று பகிரங்கத்துக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

1977 இல் அதிகாரத்துக்கு வந்த ஜே.ஆர் தாராளமயக்கொள்கையை அறிமுகப்படுத்தி தார்மிஷ்ட சமுதாயத்தை கட்டியெழுப்பப்போவதாக சூளுரைத்தார்.

யூ.என்.பி (UNP) க்கு மாற்றாக அதிகாரத்துக்கு வந்த சந்திரிகா அம்மையார் நீதியான சமூகத்தை உருவாக்கப்போவதாகக் கூறிக்கொண்டு சிறீலங்கா சுதந்திரக்கட்சி தீவிரமாக எதிர்த்த, திறந்த பொருளாதார கொள்கையையே பின்பற்றினார். இடையில் பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றிய ரணில் விக்ரமசிங்க

இலங்கையை மீளக்கைப்பற்றல் நிகழ்ச்சி நிரலை அறிமுகப்படுத்தியதன் மூலம் நவ லிபரல்வாத முதலாளித்துவ பொருளாதார முறைமைக்கு இருபது வருட திட்டம் என புதியவடிவம் கொடுத்தார். இவர்களை தொடர்ந்து 2005இல் ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்றிய மஹிந்தராஜபக்ஸவும்நவ லிபரல்வாத முதலாளித்துவ முறமையை தீவிரமாக அமுல்படுத்தி வருகிறார்.

இந்த நிலைமைகளின் மத்தியில் ஜனாதிபதி தேர்தலின் பின்னைர் தயாராக இருக்கிறது விதைகள்சட்டம் இந்தசட்டமூலம் விவசாயிகளுக்கு உகந்ததான விதை மற்றும் நாற்று உற்பத்தி உரிமையை பறிப்பதுடன் இவற்றில் ஈடுபட்டு அகப்படும் விவசாயிகள் கடும் தண்டனைக்குள்ளாவர்கள். இதனை நடைமுறைப்படுத்த விவசாய உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி என்ற போர்வையில் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் அம்பாந்தோட்டை அனுராத புரம் போன்ற நகரங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் உல்லாசப்பயணிகளுக்கான ஹோட்டல்கள் அமைப்பதற்காக தாரைவார்க்கப்படவிருக்கிறது.

இத்தேவையை முன்நிலைப்படுத்தி மேல்மாகாணத்தில் வாழும் 54இலட்சம் பேரில் சேரிகளிலும் பின்தங்கிய குடியிருப்புகளிலும் வாழும் 21இலட்சம் பேர் வெளியேற்றப்படவிருக்கின்றனர் இதேபோன்று மேற்குறிப்பிடப்பட்ட ஏனைய நகரங்களில் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும்பெறும் தொகையான மக்கள் வெளியேற்றப்படவிருக்கின்றனர்.
தற்போதைய பொருளாதார முறைமைக்கிணங்க மக்கள் வெறும் குப்பை கூழங்களாக மாற்றப்பட்டுள்ள அதேவேளை இந்தசட்டங்களுக்கு இணக்கமான மக்கள் பிரிவினரை உருவாக்குவதற்க்கு ஏற்புடையதான வேலைத்திட்ங்களும் முன்னெடுக்கப் படுகின்றன. முதலாளித்துவம் காலத்துக்கு காலம் புதுப்புது தந்திரோபாயங்களை கையாண்டு தனது சுரண்டலை தீவிரப்படுத்தி வருகிறது. முழுஆசியாவையும் சுரண்டும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கேற்ப்பவே அதிவேகப்பாதைகள் அமைக்கப்பட்டு எம்மீது கடன்சுமை ஏற்றப்படுகிறது.

சுதந்திர கல்வி சுதந்திர சுகாதாரசேவை போன்ற அடிப்படை உரிமைகள் தனியார் மயப்படுத்தலின் மூலம் விற்பனைப் பொருளாக மாற்றப்படுகிறது. இந்த திட்டங்கள் தொடர்பில் எஸ்.பி.திஸாநாயக்கா பந்துலகுணவர்த்தன மீதாக பழிசுமத்துவதில் அர்த்தமில்லை. இவற்றை செய்துமுடிப்பதற்காகத்தான் ஜே.ஆர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உருவாக்கினார். அடக்குமுறையை கையாண்டார்.

இனவாதம்,மதவாதம்,வர்க்கவாதம் போன்றவற்றை கட்டவிழ்த்துவிட்டு முதலாளித்துவ சுரண்டலை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 30வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து சிங்கள-முஸ்லிம் கலவரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இன்று அனைத்து மட்டத்திலும் மக்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது சூட்சுமமான முறையில் உழைப்பு சுரண்டப்படுகிறது.தொழிலாளர் வர்க்கத்தை குழுக்களாகப் பிரித்து மேற்பார்வையாளார்களுக்கு பதிலாக குழுக்களுக்கு தலைவர்களை நியமிப்பதன் மூலம் மேலதிக உழைப்பு சுரண்டப்படுகிறது. கவர்ச்சிகரமான திட்டங்களை முன்நிறுத்தி உழைக்கும் மக்கள் கடன்பொறிக்குள் வீழ்த்தப்பட்டு மேலதிக உழைப்பு சுரண்டப்படுகிறது. மக்களின் சிந்தனைகளை திசைதிருப்பும் விதத்தில் தொலைக்காட்சி நாடகங்கள், கேளிக்கை கூத்துகளை ஒளிபரப்பப்படுகிறது.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில்தான் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது வேட்பாளர், கட்சி சார்பற்ற வேட்பாளர் போன்ற பேச்சுகள் பரவலாக பேசப்படுகிறது. ரணில் விக்ரமசிங்காவை ஜனநாயகவாதியாக ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்துவருகின்றன. ரணிலும் சுதந்திரக்கல்வி காப்பற்றபடவேண்டும் எனவும் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர். 1978இல் உயர்கல்வி சட்டத்தின் 16வது திருத்தத்தை கொண்டுவந்ததன் மூலம் சுதந்திரகல்வி தனியார்துறைக்கு திறந்துவிடப்பட்டது ரணில் கல்வி அமைச்சராக பதவிவகித்த காலத்தில் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

1989,90களில் வீதிக்கு வீதி ஜே.வி.பி இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் குற்றுயிரும் குறை உயிருமாக ரயர்களில் பொசுக்கியதும்,அன்றைய காலகட்டத்தில் பிரசித்தமான பட்டலந்த வதைமுகாமுடன் ரணிலுக்கிருந்த தொடர்புகள் பற்றிய பேச்சுகள் பற்றி எல்லாம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். எனவே ரணில் கூறும் ஜனநாயகம் எத்தகையது என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
இங்குள்ள வேறுபாடு கால்சட்டையும் – சாரமும்தான் புரட்சிகர கொள்கை பேசும் ஜே.வி.பி முதலாளிக்கு அதிகலாபம் தொழிலாளிக்கு அதிக சம்பளம் என்ற புதிய கொள்கை பிரகடனத்துடன் கட்சி சார்பற்ற பொதுவேட்பாளரை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. இவர்கள் என்னதான் கட்சி சார்பற்ற வேட்பாளார் என கூறினாலும் இவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுபடுபவர்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களாக அல்லது பிரபல அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக காணப்படுகிறார்கள்.

ஊடகங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் விதம் விதமான கருத்து திணிப்புகளை செய்யும் அதேவேளை ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்சினைகளை வெளிப்படுத்த தயாரில்லை. அனுராதபுரத்தில் வருடத்திற்க்கு 300 பேர் சிறுநீரக வியாதியால் மரணிக்கிறார்கள். ‘றத்துபஸ்வெல” பகுதி மக்கள் தமது குடிநீரை நஞ்சாக மற்றவேண்டாம் எனக்கோரி வீதிக்கிறங்கி போராடும் போது அம்மக்ளுக்கு துப்பாக்கி குண்டுகளால் பதில் சொல்லப்படுகிறது.
பாதாளஉலக கிரிமினல்களின் உருவாக்கத்தை இல்லாமல் செய்வதற்க்குப் பதிலாக அவர்களை கொல்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாணமுற்படுகின்றன? நவலிபரல்வாதத்தையும் ஜனநாயக மறுதலிப்பையம் பிரித்து பார்க்க முடியாது.
இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் கோசம் முன்னிலை படுத்தப்படுகிறது. நிறைவேற்று ஜனாதிபதிக்குப் பதிலாக நிறைவேற்று பிரதமர் பாராளுமன்றத்துக்கு பதில்சொல்லும் ஜனாதிபதி என புதுப் புது யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த யோசனைகள் எவையுமே சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை தரப்போவதில்லை.

பிரச்சினைகள் அனைத்து மக்களுக்கும் சமமானது எனவே சாதாரண மக்களின் அரசியல் சிந்தனை விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தாம் சார்ந்த வர்க்கத்தில் இன,மத,மொழி பேதங்களை ஓரங்கட்டி ஓரணியாக திரண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

Tags: ,

Leave a Reply