போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் பரஸ்பரம் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இலங்கை – இந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
நேற்றுப் புதன்கிழமை இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற இந்திய-இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உயரதிகாரிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இலங்கையில் இருந்து வடக்கு மாகாண பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையிலான குழுவினரும் இந்தியாவின் சார்பில் அந்நாட்டு தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உதவி இயக்குநர் விஜயகுமார் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.
இதில் இரு நாடுகளினிடையே கடல், வான் வழியாக போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கக் கையாளப்படும் உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அத்துடன் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான விவரங்கள், அவர்களின் நடமாட்டங்களை இலங்கை – இந்திய உளவு அமைப்புகள் கண்காணித்து, அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தால் அது தொடர்பான விவரங்களையும் பகிர்ந்து கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
















