ஐ.நா விசாரணையை விரிவுபடுத்துமாறு கோர எவருக்கும் அதிகாரம் இல்லை. – மாவையின் பேச்சுக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கடும் அதிருப்தி!

Mavai-Senathirajah3ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை விரிவுபடுத்த எந்தவொரு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 33 உறுப்பினர்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

அதில், ஐக்கிய நாடுகளின் விசாரணையை போர் இடம்பெற்ற காலப்பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் 1974 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்றதாக கூறப்படும் ”தமிழினப்படுகொலைகள்” தொடர்பிலும் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

எனினும் இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு எதுவும் தெரியாது என்றும், மாவை சேனாதிராஜா ஆங்கில பத்திரிகை ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள மாகாணசபை அமைச்சர் ஒருவரையும், உறுப்பினர்களையும் மாவையின் இந்த பேச்சு தொடர்பில் வினவியபோது,

அப்படியென்றால், தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன்,

போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இரு தரப்பினரையும் அதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையும் விசாரிக்க வேண்டும் என்றும்,

”இனப்படுகொலை” என்ற சொற்பதத்தை எங்கும் எதிலும் எப்போதும் பயன்படுத்த கூடாது என்றும்,

ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்றும்,

தலைவர் சம்பந்தனுக்கும், செயலாளர் மாவை.சேனாதிராஜாவுக்கும் தெரிந்தா கூறினார்?

என்று மறுகேள்வி எழுப்பியதோடு, இன்றுவரை சுமந்திரன் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோராமல், தனது கருத்தில் விடாப்பிடியாக இருப்பது தொடர்பில் இவர்களின் நிலைப்பாடு என்ன? எனவும் வினவினர்.

வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியிருக்கிறது. மக்கள் எமக்கு மிகப்பெரிய ஆணையை வழங்கியுள்ளார்கள். இங்கு இடம்பெற்றது இனப்படுகொலை என்று மக்கள் தெளிவாக நம்புகிறார்கள். அதற்கு போதுமான ஆதாரங்களும் உண்டு. மக்களின் எண்ணம் விருப்பம் அதுவாக இருக்கிறது. எனவே மக்களின் பிரதிநிதிகளாகிய நாம் மக்களின் அபிலாசைகளுக்கு மாறாக முரணாக எதையும் செய்ய முடியாது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நாம் 28 பேரும், கிழக்கு மாகாணசபையை சேர்ந்த 5 பேரும் இணைந்து கையொப்பமிட்டு நவநீதம்பிள்ளை அம்மணிக்கு கடிதம் அனுப்பியதில் எந்த தவறும் கிடையாது.

தேசியப்பட்டியல் உறுப்பினர் சுமந்திரன், இறுதி யுத்தம் தொடர்பில், ஐ.நா விசாரணை தொடர்பில் எழுந்தாமானமாக எதையும் பேச முடியுமென்றால், தேர்தலை சந்தித்த வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளான மாகாணசபை உறுப்பினர்கள் நாங்கள் நீதியாக நியாயமாக ஐ.நாவை கோரும் உரிமையை எவரும் மறுக்க முடியாது. இப்படி கோரும் உரிமை இனமானமுள்ள ஒவ்வொரு தமிழ் பிரஜைக்கும் உண்டு என்றும் சீற்றம் காட்டினர்.

Tags: , ,

Leave a Reply