வளர்இளம் படைப்பாளிகள், கலைஞர்களை அடையாளப்படுத்தல், ஊக்குவித்தல். இளையோர்கள் மாணவர்கள் சிறுவர்களின் வாசிப்புத்திறனை அதிகரித்தல் எனும் நோக்கோடு ஜனரஞ்சக சஞ்சிகையாக வவுனியாவிலிருந்து “பிருந்தாவனம்” மாதச்சஞ்சிகை வெளிவந்துள்ளது.
இச்சஞ்சிகைக்கான அறிமுக வெளியீட்டு விழா, வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் கடந்த 17.08.2014 ஞாயிறு அன்று நடைபெற்றது.
சஞ்சிகையின் முதல் பிரதியை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.
கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த சஞ்சிகை வெளியீட்டு விழாவில், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தலைவர் நா.சேனாதிராசா, வவுனியா வடக்கு முன்னாள் உதவி அரச அதிபர் க.ஐயம்பிள்ளை, சுரேந்திரன் நற்பணி மன்ற அமைப்பாளர் வே.சுரேந்திரன், வைத்தியர் இரத்தினம் தருமு, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் பரமேஸ்வரன், அண்ணாநகர் அ.த.க.பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி நடேசமூர்த்தி, வசந்தம் வானொலி அறிவிப்பாளர் என்.பி.பிரதாப், கலைஞர் மாணிக்கம் ஜெகன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருமதி சிவராணியை ஆசிரியராகக்கொண்டு மாதம் ஒரு சஞ்சிகையாக வெளிவரும் பிருந்தாவனம் சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுத விரும்பும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் birunthavanam1@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
















