சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி கொடுமைப்படுத்தி வருவதால் தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த பல வருடங்களாக இலங்கை அரசின் சிங்கள கடற்படை மீன்பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்களை தாக்கி கைது செய்வதோடு அவர்களுடைய உடமைகளையும் கைபற்றி பெரும் நஷ்டத்தை உண்டாக்குகின்றனர். இதனால் தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என விருதுநகரை சேர்ந்த ஆனந்த முருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் இவர் தனது மனுவில் தமிழக மீனவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய அட்மிரல் பொறுப்பில் உள்ள கடற்படை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் உடனடியாகபதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வரும் 25-ஆம் தேதி வரை அவகாசம் கொடுப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
















