போலி பெயருடன் தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி சிறுமி ஒருவரை பல முறை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தி வந்த இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சந்தேகநபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். மன்னார் நகரை அண்டிய பனங்கட்டுகொட்டு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டிலிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற சமயம் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னுடைய தொலைபேசி இலக்கத்தை அந்தச் சிறுமியிடம் வழங்கி தன்னுடன் கதைக்கும்படி வற்புறுத்தியுள்ளார் இந்தச் சிறுமி குடியிருக்கும் பகுதிக்கு அருகிலிருந்தே மன்னார் சௌத்பார் இராணுவ முகாமுக்கு பவுஸர் மூலம் குடிதண்ணீர் எடுத்துச்செல்லும் ஒரு வாகனச் சாரதியாக இந்த சிப்பாய் செயல்பட்டு வந்துள்ளார். இதனால் சிறுமியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இச்சிறுமி குறுகிய காலத்தில் பணம் சேகரித்து ஒரு கையடக்க தொலைபேசி வாங்கியுள்ளார்.அத்துடன் இருவருக்குமிடையே அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்தி தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இதன் மூலம் அந்த இராணுவச் சிப்பாய் அழைக்கும் இடங்களுக்கு சிறுமி சென்று வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஓரிரு தினங்களுக்கு முன் இராணுவச் சிப்பாய் தான் கடமைபுரியும் மன்னார் சௌத்பார் இராணுவ முகாமுக்கு முன்பாகவுள்ள ஒரு பற்றைக்காட்டுக்குள் வரும்படி அழைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.
அச்சமயம் அப்பகுதியால் வந்த இருவர் இதனைக் கண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தி வெளிச்சத்துக்கு கொண்டுவந்தனர். அதேவேளை இராணுவ சிப்பாய் வவுனியாவுக்கு வரும்படி சிறுமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். சிறுமியும் வவுனியா சென்றுள்ளார். ஆனால் அங்கு காதலனை காணாது தேடியுள்ளார். இதை அறிந்த வேறு ஒருவர் சிறுமியின் மீது மோகம் கொண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்டபோது இவர் அதிலிருந்து தப்பித்து ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்து தனது நிலைமையைத் தெரியப்படுத்தியுள்ளார். இதைக் கேள்வியுற்ற வீட்டார் வவுனியாவில் உள்ள மகளிர் அமைப்பொன்றின் மூலம் சிறுவர் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு பின் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாள் இதைத் தொடர்ந்து இந்தச் சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாள். சிப்பாயை விசாரிப்பதற்கு அந்தச் சிப்பாயின் முகாம் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லையெனவும் பொலிஸார் நீதிமன்றின் கவனத்தக்கு கொண்டு வந்திருந்தனர்.
இராணுவச் சிப்பாய் இந்தச் சிறுமியுடன் வேறொரு பெயரிலேயே தொடர்புகொண்டுள்ளார் எனவும் தொலைபேசி இலக்கத்தை பொலிசார் பரிசோதித்து பார்த்தவேளையில் அது ஒரு பெண்ணின் பெயரில் பதிவாகியிருந்தது. அது குறிப்பிடப்பட்ட இராணுவ சிப்பாயின் மனைவியின் பெயர் எனவும் அவரின் மனைவியின் மூலமே சிப்பாயின் உண்மையான பெயர், விவரங்களை பெற முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த இராணுவ சிப்பாயை கைதுசெய்த மன்னார் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சந்தேகநபரை முற்படுத்தினர். விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் குறித்த இராணுவச் சிப்பாயை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு அன்றே அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார் அத்துடன் குறித்த சிறுமியை அன்னை இல்லத்தில் ஒப்படைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார். பாதிப்புக்குள்ளான சிறுமி சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.பிறிமூஸ் சிராய்வா மற்றும் ரி.வினோதன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
















