ஜெயலலிதாவை வரவேற்று மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றவேண்டும் என மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை நகருக்கு வரவிருக்கும் ஜெயலலிதாவை வரவேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் முறைகேடாக வைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், அரசு தரப்பில் அனுமதி பெற்றுதான் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதனை மறுத்த பழனிசாமியின் வழக்கறிஞர் கூறியதாவது, எந்த ஒரு இடத்திலேயும் முறையான அனுமதி பெற்று வைக்க வாய்ப்பு இல்லை. ப்ளக்ஸ் பேனர்களால் பொதுமக்களின் போக்குவரத்திற்கும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும் என வாதாடியுள்ளார். இதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்குமாறு இரு நீதிபதிகள் கூறியபோது, அரசு அனுமதி பெற்ற இடத்தை தவிர, அனுமதி பெறாத இடத்தில் கூடுதலாக வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை எடுத்துவிடுவதாக செல்லப்பாண்டியன் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
















