இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியினை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர்கள் குழு இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.இதன்பொது 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இரா.சம்பந்தன், மாவை எஸ்.சேனாதிராஜா, சுரேஷ் பிரேம சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராஜ் மற்றும் செல்வம் அடைக்கல நாதன் ஆகியோர் நேற்று காலை டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு கிடைப்பது குறித்தும், 13-வது அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறீலங்காவை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும், இது தொடர்பாக நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் இன்று சந்தித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி இரா. சம்பந்தன் தலைமையில் எம்.பிக்கள் பிரதமரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இலங்கையில் 13 வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
















