சித்தப்புவுக்கும் பெறா மகனுக்கும் இடையில் முறுகலா? கரகாப்பிட்டிய வைத்தியசாலை மூடப்படும் அபாயம்?

Namal-Gotaபாதுகாப்பு செயலாளர் கோதபாஜ ராஜபக்சவின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவின் நொருங்கிய சகபாடி மேயராக பதவி வகுக்கும் காலி மாநகர சபைக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காலி கரகாப்பிட்டிய வைத்தியசாலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும்; குப்பை கூழங்களை அகற்ற காலி மாநகர சபை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குப்பைகளை அகற்றுவது வைத்தியசாலையின் வேலை அல்ல என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் வைத்தியசாலை முன்பாகவுள்ள குப்பை கூழங்களை அகற்றுவது மாநகர சபையின் வேலை அல்ல என்றும் அந்த வைத்தியசாலை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயற்படுவதாகவும் காலி மாநகர சபை மேயர் மெத்சிறி டி சில்வா கூறினார்.

குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒரு பில்லியன் ரூபாவை மாநகர சபை செலுத்துவதாகவும் அதனால் அரசாங்க நிறுவனங்களின் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை அந்த தனியார் நிறுவனம் செய்வது இல்லை எனவும் பொதுமக்களின் குப்பைகளை மாத்திரமே அந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் மேயர் தெரிவித்தார்.

ஆனால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பொதுமக்கள் வீசுகின்ற குப்பை கூழங்களை வைத்தியசாலை அகற்ற முடியாது என்றும் அது காலி மாநகர சபையின் வேலை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் மாநகர சபைதான் அந்தக் குப்பைகளை அகற்றியது எனவும் கடந்த ஒரு மாதமாக அந்த குப்பைகள் அகற்றப்படவில்லை எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

குப்பைகள் பெருகி துர்நாற்றம் வீசுவதாகவும் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கூறிய பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலையின் நோயாளர் பிரிவை மூடவுள்ளவுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையானால் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த அனைத்து பிரிவுகளும் மூடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடச் செல்லும் பொதுமக்கள் வீசுகின்ற குப்பைகளே அகற்றப்படாமல் இருப்பதாகவும் பொதுமக்களின் வாக்குகளில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனவும் கூறிய பணிப்பாளர் வைத்தியசாலையின் கழிவுகள் எரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் தான் தொடர்பு கொள்ளப் போவதில்லை என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளாருக்கு அறிவித்து குப்பை கூழங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மேயர் மெத்தசிறி டி சில்வா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply