சுன்னாகம் கிணறுகளில் கழிவெண்ணெய் கசிவு, மாகாணசபை உறுப்பினர்கள் பரிசோதனை

sunnagam-sithவலிகாமம் தெற்குப் பிரதேசத்திற்குட்பட்ட சுன்னாகம் பிரதேச கிணறுகளில் காணப்படுகின்ற கழிவு எண்ணெய்க் கசிவு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன்;, பா.கஜதீபன், பிரதேச சபை தவிசாளர் பிரகாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றையதினம் (23.08.2014) அப்பகுதிகளுக்குச் சென்று கிணறுகளை பரிசோதித்துள்ளனர்.

இதுபற்றி புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கூறுகையில்,

சுன்னாகத்தில் இயங்குகின்ற இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் மின்சார நிலைய மின்பிறப்பாக்கியில் இருந்து நிலத்திலே விடப்படுகின்ற கழிவு எண்ணெய் நிலத்திற்குள் ஊற்றுநீருடன் கலந்து சுன்னாகம் பிரதேசத்தின் பெரும் பகுதிகளில் கிட்டத்தட்ட 700 முதல் 800 குடும்பங்களின் கிணறுகளில் நீருடன் கழிவெண்ணெய் கலந்திருக்கின்றது. இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகியிருக்கின்றது. பிரதேச மக்கள் அந்தத் தண்ணீரை குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ அல்லது தோட்டத்திற்கு நீர்ப் பாய்ச்சுவதற்கோ முடியாத நிலையில் உள்ளனர்.

அத்துடன் இந்த கழிவெண்ணெய் கசிவானது சுன்னாகம் மாத்திரமன்றி பல்வேறு பகுதிகளுக்கும் பரவிக்கொண்டே வருகின்றது. ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதன் முதற் கட்டமாக மக்களின் உடனடித் தேவையினை நிவர்த்திப்பதற்காக வட மாகாணசபை ஒரு தண்ணீர் பவுஸரை வழங்கியிருக்கிறது. அடுத்த கட்டமாக மின்சார சபைக்கு எதிராக வழக்குத் தொடரவும் யோசித்திருக்கின்றது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்குடனேயே நேற்றையதினம் பிரதேசத்திற்கு சென்று கிணறுகளை பரிசோதித்தோம். இலங்கை மின்சார நிலைக்கு அல்லது சுன்னாகம் மின்சார நிலையமோ வடக்கு மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்படாதவையாகும். ஆகவே வடக்கு மாகாணசபை மத்திய அமைச்சருடனோ ஜனாதிபதியுடனோ தொடர்பு கொண்டுதான் இப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply