இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தான் அரசியலில் நுழைவதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை சர்ச்சைக்குரிய பொலிஸ் உயரதிகாரியும் தனது விசுவாசியுமான அனுர சேனநாயக்காவிடம் ஒப்படைத்துள்ளார்.
இருவரும் இணைந்து பல இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
இதில் முக்கியமான உடனடி நடவடிக்கையாக தற்போதைய பொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து அகற்றும் திட்டம் அமைந்துள்ளது.அந்த இடத்திற்கு தனது விசுவாசியான அனுரவை நியமித்தால் பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தான் விரும்பியபடி செயற்படலாம் என கோத்தா கருதுகிறார். டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக அவரை அப்பதவியில் அமர்த்த கோத்தா எண்ணியுள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் சில சட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன. அனுர சேனநாயக்காவிற்கு இரண்டு முறை பதவிநீடிப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவரை நியமிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக அவரை வேறு வழிகளில் நியமிக்கும் திட்டமும் கோத்தாவிடம் காணப்படுகின்றது. எனினும் 9 மூத்த பொலிஸ் அதிகாரிகள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மூன்றாவது தடவையாக பதவி நீடிப்பு வழங்குவது தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இது குறித்து நீதிமன்றம் செல்லதிட்டமிட்டுள்ளனர்.
இதேவேளை தனது விசுவாசியான அனுர சேனநாயக்காவிற்கு பாதுகாப்பு செயலாளர் கறுவாத்தோட்டத்தில் ஆடம்பர பங்களா ஒன்றை வழங்கியுள்ளார்.இரவு நேரங்களில் ஆடம்பர விருந்துகள் இடம்பெறுகின்றன. இந்த விருந்துகளுக்கு இலங்கையின் முக்கிய வர்த்தக புள்ளிகளே அழைக்கப்படுகின்றனர்.
இந்த விருந்துபசாரங்களின் போது அனுர சேனநாயக்கா கோத்தா தேர்தலில் போட்டியிடவுள்ளது குறித்து பகிரங்கமாக அறிவித்து வருவதுடன் அவருக்கு ஆதரவு வழங்குமாறு கோரிவருகின்றார். பாதுகாப்பு செயலாளரின் ஏற்பாட்டிலேயே இந்த பிரச்சாரம் இடம்பெறுகின்றது.
















