தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ் விமானம் தொடர்பிலான வழக்குப் பண்டங்களை காணவில்லை என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
விமானப்படையினருக்கு சொந்தமான அன்டனோவ்-32 ரக விமானம் பலாலியிலிருந்து இரத்மலானை நோக்கிப் பயணித்த போது சுட்டு வீழ்த்தப்பட்டது.
2000ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வில்பத்து வனப்பிரதேசத்திலிருந்து ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த விமானத்தில் பயணித்த இராணுவ, விமான மற்றும் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட 32 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் அனுராதபுர உயர் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு இலக்கான விமானத்தின் பாகங்கள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம், அனுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.
எவ்வாறனெனினும் இந்த விமானத்தின் பாகங்களும், ஆவணங்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் நேற்று முன்தினம் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி வரையில் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுததுக்கொள்ளப்பட உள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலி உறுப்பினர்களான ஜெகன் மற்றும் சிவலிங்கம் ஆகியோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் கேமா சுவர்ணாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
















