பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தால் அதனை பரிசீலிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
தீர்வு தேவையாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டில் உள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கே வரவேண்டும். மாறாக இந்தியாவுக்கும் ஜெனிவாவுக்கும் விஜயம் செய்வதில் அர்த்தம் இல்லை. எமது ஜனாதிபதி எப்போதும் தேசிய ரீதியான தீர்வையே முன்னெடுப்பார். மனிதாபிமான நடவடிக்கை கூட தேசிய ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிடடார்.
மேற்கு நாடுகள் தலையீடு செய்த எந்த நாட்டிலும் சமாதானம் ஏற்படவில்லை. மாறாக அந்நாடுகளில் அரசியல் ரீதியான குழப்பங்களே ஏற்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
















