கூட்டமைப்பு இந்தியா செல்வதைத் தடுக்க அரசு எடுத்த முயற்சி தோல்வியில் – பா.அரியநேந்திரன்

arijenthiranதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியாவிற்குச் செல்லாமல் தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுப்பட்டது. ஆனால், அது வெற்றியளிக்கவில்லை. இது இலங்கை அரசுக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறை அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் அழகுதனு ஆசிரியரின் ‘அப்பா எங்கே?’ என்ற குறுந்திரைப்பட வெளியீட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,

எமது கலை, பண்பாடுகளைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இதைப் போன்ற வெளியீடுகள் எமக்குத் துணைபுரிகின்றன. அதிலும் ‘அப்பா எங்கே?’ என்ற குறுந்திரைப்படம் தொழிலுக்குச் சென்ற அப்பா காணாமல்போனமையைச் சித்திரிக்கிறது.

வடக்கு, கிழக்குத் தமிழர்களாகிய நாம் 65 வருடகாலமாக அப்பா எங்கே, அம்மா எங்கே, பிள்ளை எங்கே, எமது நிலம் எங்கே என்ற ஏக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த ஏக்கத்தை இல்லாமல் செய்வதற்காகத்தான் அஹிம்சை வழியில் 30 வருடங்களும் அதன் பின் ஆயுத வழியில் 30 வருடங்களும் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது.

ஆனால், மக்களுக்கான எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இருந்தபோதும் தற்போது சர்வதேச ரீதியாக தமிழர்களின் உரிமையைப் பெறுவதற்கு பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாகத்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவைப் பார்க்கமுடியும்.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு இந்தியப் பிரதமரைச் சந்தித்திருப்பதும் ஒரு திருப்புமுனையாக இருந்தாலும் எமக்கான தீர்வை இந்தியா அரசு தந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை. முன்னிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசியிருந்தும் செயல் வடிவில் எதுவும் நடைபெறவில்லை.

தற்போது பதவியில் இருக்கும் மோடி முதன் முறையாக ஆட்சிப்பீடம் ஏறியிருக்கிறார். அவர் தமிழர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவாரானால் அது வரவேற்கத்தக்கதே.

இதேவேளை, இந்தியப் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கக்கூடாது என்பதற்காக இந்தியாவில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமியை இலங்கை அரசு பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியாவிற்குச் செல்லாமல் தடுக்க முயற்சித்தும் கூட அது வெற்றியளிக்கவில்லை.

இது இலங்கை அரசுக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியாகும். இந்தியாவில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றமை போல இலங்கையிலும் ஆனந்தசங்கரி செயற்பட்டு வருகிறார். இதனைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Tags: , ,

Leave a Reply