ஏர்செல் உரிமையாளரை மிரட்டியதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் தன்னுடைய பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கக்கூடாது என தயாநிதிமாறன் தாக்கல் செய்த மனுவை நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்ததால் அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவசங்கரன் என்பவருக்கு சொந்தமான ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை, மலேசியா நிறுவனமான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் கட்டாயபடுத்தியதாக சிபி.ஐ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த முக்கிய வழக்கின் குற்றப்பத்திரிகையில் தனது பெயரை சேர்க்கக்கூடாது என வலியுறுத்தி தயாநிதி மாறன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அரசியல் பழிவாங்கும் எண்ணம் காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பான தகவல்களை மலேசிய அதிகாரிகளிடம் இருந்து சிபிஐ இதுவரை பெறவில்லை என்றும் அவர் தன்னுடைய மனுவில் கூறீருந்தர்.
நேற்று இந்த மனு நீதிபதி எச்.எல்.தாத்து தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சட்டப்படி தடை விதிக்க முடியாது என்று தயாநிதிமாறன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் மனுதாரர் முறையிடலாம் என உத்தரவிட்டனர்.
















