இனப்பிரச்சினை காரணமாக இலங்கையில் முப்பது வருடங்களாக ஒரு மோதல் நிலைமை – முரண்பாட்டு நிலையொன்று நிலவி வந்திருக்கின்றது. இதன் காரணமாக இலங்கை அரச படைகளுக்கும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, ஆயுதமேந்திப் பேராராடிய விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பெரும் யுத்தம் ஒன்று மூண்டிருந்தது. இது உலகமறிந்த இரகசியம்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரிந்த அரசாங்கத்தின் தந்திரோபாய சர்வதேச பிரசாரங்களினாலும், வேறு காரணங்களினாலும், விடுதலைப்புலிகளை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை செய்திருந்தன. அந்த அளவிற்கு இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச மயமாகி அனைவரும் அறிந்தவொரு விடயமாகியிருந்தது.
இந்த யுத்த மோதல்கள் காரணமாக, தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். சிங்கள மக்களும்கூட பாதிப்படைந்திருந்தார்கள். குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் மீது மிக மோசமான கெடு பிடிகளையும், நெருக்குவாரங்களையும் அரசாங்கத்தினரும், அரச படையினரும் பிரயோகித்திருந்தார்கள்.
இரு நாடுகளுக்கிடையில் பிரயாணம் செய்கின்ற அந்நியர்கள் மீது விதிக்கப்படுகின்ற விசா நடைமுறைக்கு ஒத்த வகையில், தமிழ் மக்கள் மீது உள்நாட்டுக்குள்ளேயே விசா நடைமுறைக்கு ஒப்பான முறையி;ல் இராணுவ பாஸ் பெற வேண்டிய கட்டாய நிலைமை அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந்தது,
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்குள் வருவதற்கும், நாட்டின் தலைநகராகிய கொழும்பு உட்பட்ட பிரதேசங்களுக்குச் செல்பவர்களுக்கு அந்தப் பிரதேசங்களில் உள்ளவர்கள் ஸ்பொன்சர் செய்ய வேண்டிய நிலைமையும் உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன் விசா நடைமுறையைப் போல – குறிப்பிட்ட தினங்கள் மாத்திரமே, செல்லுமிடங்களில் அவர்கள் தங்கியிருந்து தமது காரியங்களை முடித்துக் கொண்டு திரும்பிவிட வேண்டும் என்ற நியதியும் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட தினங்களுக்கு மேல் தங்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டார்கள்.
தொடர்ச்சியான ஒரு யத்தச் சூழ் நிலையின் கீழ் சுதந்திரமான நடமாட்டம் மட்டும் அல்லாமல், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதும்கூட, சிக்கல் மிகுந்த மீறிச் செயற்பட முடியாத இராணுவ நடைமுறைகளின் மூலம் மோசமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பாவனைப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்கள் மீதும் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தன. எரிபொருள் மற்றும் மின் பிறப்பாக்கி உபகரங்கள், பொருட்கள் என்பனவும் தடுக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் யுத்த பிரதேசத்தினுள் – விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் மீது மோசமான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கும் அப்பால் மோதல்கள் காரணமாகவும், இராணுவ நடவடிக்கைகள் காரணமாகவும், தமிழ் மக்கள் நாளாந்தம் காயமடைந்தார்கள். பலர் உயிரிழந்தார்கள். அது மட்டுமல்லாமல் இராணுவ தேடுதல் நடவடிக்கைகள், சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் என்பவற்றின்போது பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் பலருக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது. கைது செய்து கொண்டு செல்லப்பட்ட பலர் பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தெருவோரங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டார்கள்.
பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என வலுவிழந்தவர்களும் இந்தக் காலப்பகுதியில் மோசமாகப்பட்டிருந்தார்கள். தொடர்ச்சியான இடப்யெயர்வும் அந்த மக்களைப் பெரிதும் வாட்டியிருந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிரான மோசமான இறுதி இராணுவ நடவடிக்கை – யுத்த நடவடிக்கை யுத்த பிரதேசத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை – தமிழ் மக்களைப் மிக மிக மோசமாகப் பாதித்திருந்தது.
ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். எண்ணற்றவர்கள் காயமடைந்து, உரிய வைத்திய கவனிப்பும், வைத்திய சிகிச்சையுமின்றி பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதனாலும் பலர உயிரிழந்தார்கள்.
இறுதி யுத்தத்தின்போது மக்கள் இடம்பெயர்ந்து. இடம்பெயர்ந்து தற்காலிகமாகக் குடியமர்ந்திருந்த கொட்டில் குடியிருப்புக்கள் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகின. மருத்துவமனைகளும் தாக்கப்பட்டன. போக்குவரத்து மார்க்கங்களிலும் குண்டுகள் வீழ்ந்து வெடித்துப் பலரைக் காவு கொண்டன. யுத்தத்தின் இறுதி நேரத்தில் ஊழிக்கால தாண்டவத்தையும் விட நிலைமைகள் மோசமாகியிருந்தன. இதனால் விபரம் அறியாத நிலையிலேயே மாண்டு போனார்கள். பலர் கடுகாயமடைந்தார்கள். தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள், துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் என்பவற்றுக்கு ஆளாகிய பலருடைய உடல்களில் குண்டுச் சிதறல்கள் அகற்ற முடியாத நிலையில் இன்னும் இருக்கின்றன.
இவ்வாறு சொல்லொணாத துன்பங்களுக்கும் கஸ்டங்களுக்கும் உள்ளாகி, யுத்தச் சூழலில் குண்டு மழைக்குள் அகப்பட்டு தெய்வாதீனமாகத் தப்பி மீண்டு வந்துள்ள மக்களைப் பார்த்து, நீங்கள் அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது, அது இது என்று கேட்கக்கூடாது என்று சிலர் ஆலோசனை கூறுகின்றார்கள். அரசியல் உரிமைகள் பற்றி நீங்கள் பேசக்கூடாது. அந்த அருகதை உங்களுக்குக் கிடையாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
குறிப்பாக அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பாதுகாப்பு செயலமர்வில், இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட சுப்பிரணிய சுவாமிகளும், இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பபவர்களில் ஒருவராகிய, சமூக சேவையாளர் என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்றும், வல்லுனர் என்றும் கருதப்படுவதாகக் கூறப்படுகின்ற இந்தியராகிய அவ்தாஷ் கௌஷலும், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பிலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் இவ்வாறான ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வெளியிட்டிருக்கின்றார்கள்.
இவர்களுடைய கருத்துக்கள் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தியிரக்கின்றன. தமிழ் அரசியல் வட்;டாரங்களிலும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
‘இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை’
இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. மொழி ரீதியான பிரச்சினையே இருக்கின்றது என்ற புதிய கண்டுபிடிப்பு ஒன்றை இலங்கைக்கு வருகை தந்திருந்த சுப்பிரமணியசுவாமி வெளியிட்டிருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் என்று கூறப்படுகின்ற சுப்பிரமணிய சுவாமியை கோமாளி அரசியல்வாதியென்றும் சிலர் அழைப்பதுண்டு. நேரத்துக்கு ஒரு கருத்தும், நாளுக்கொரு நிலைப்பாடுமாகக் கருத்துக்களை அவர் வெளியிடுவதன் காரணமாகவே அவரை அவ்வாறு அழைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, புதிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக கொழும்பில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலமர்வில் அவர் கலந்து கொண்டிருந்தார்.
‘இலங்கையில் இனப்பிரச்சினையென்ற ஒன்று இல்லை. யுத்தம் முடிவுக்கு வந்தவுடன், பிரச்சினைகளுக்கான வழிகள் மூடப்பட்டுவிட்டன. இன்று இலங்கையில் மொழி ரீதியான பிரச்சினையே உள்ளது. சிங்களம், தமிழ் என தனித்தனியே செயற்படுகின்றமையே பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது’ என்று அந்த பாதுகாப்பு செயலமர்வில் உரையாற்றியபோது அவர் கூறியிருக்கின்றார்.
அதேநேரம் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என்றும் சுப்பிரமணியசுவாமிகள் கூறியிருக்கின்றார்.
இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாகவே இந்தியா கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. சர்வதேச அளவிலான அந்த ஒப்பந்தத்தையடுத்தே, தனது இராணுவத்தை அமைதிகாக்கும் படையென்ற பெயரில் இலங்கைக்கு இந்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இனப்பிரச்சினைக்கு, ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இலங்கையில் மாகாண சபை ஆட்சி முறையை இந்தியா அறிமுகப்படுத்தி, அதற்காக இலங்கை அரசியலில் 13 ஆவது அரசியல் திருத்தத்தை மேற்கொள்ளச் செய்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி, மாகாண சபைகள் மட்டத்தில் பிராந்தியங்களுக்கு காணி. பொலிஸ் உட்பட முக்கிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது அப்போது மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், அரசியலமைப்பிலேயே உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு 27 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும், அதன் மூலம் உருவாக்க்பட்ட மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னரான இன்றைய நிலையிலும் கூறிக் கொண்டிருக்கின்றது. மாகாணசபை வேண்டும் என்று இலங்கைத் தமிழ் மக்கள் இந்தியாவிடம் ஓடிச் சென்று கேட்கவில்லை. நியாயமான சமத்துவமான உரிமைகளுடன் கூடிய, சுயாட்சிக்கான அதிகாரங்களைக் கொண்டதோர் அரசியல் தீர்வையே அவர்கள் கேட்டிருந்தார்கள். நாடியிருந்தார்கள். மாகாண சபை வேண்டும். அதற்குப் பொலிஸ் அதிகாரங்களையும் காணி அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என்று அவர்கள் இந்தியாவிடம் கோரவில்லை.
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. இதற்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காக திம்பு தொடக்கம் ஐரோப்பிய தலைநகரங்கள் வரையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. உள்நாட்டிலேயே மிதவாத அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், ஆயுதமேந்திய அமைப்புக்களின் தலைவர்கள் மட்டத்திலேயும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுக்களின் பின்னர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து ஒப்புக்கொண்டு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டிருந்தன. பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கத் தரப்பினரே அவற்றைக் கிழித்தெறிந்த சம்பவங்களும் பகிரங்கமாக இடம்பெற்றிருந்தன.
இதனைப் புரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ள மறுத்துள்ள அல்லது புரிந்து கொள்ளாத மாதிரி வேடம் புனைந்துள்ள சுப்பிரமணிய சுவாமிகள் அரைவேக்காட்டுத்தனமாக இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்றும், மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லை என்றும் கருத்து வெளியிட்டிருப்பது வேடிக்கையாகவும் ஒரு வகையில் வேதனை அளிப்பதாகவும் உள்ளது,
இலங்கைக்கு அவர் வந்திருந்தபோது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், அவருடைய அரசாங்ககத்தின் உயர் மட்டத்தினரையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் புதுடில்லிக்குச் சென்று சந்திப்பதாக இருந்தது. ஆயினும், இலங்கை ஜனாதிபதி மகி;நத ராஜபக்சவின் அனுமதியின்றி கூட்டமைப்பினரை இந்திய அரசாங்கத்தினர் சந்தி;க்க மாட்டார்கள் என்றும் அவர் திருவாய் மலர்ந்திருந்தார். அவ்வாறு அவர் கூறி வாய் மூடுவதற்கு முன்பே கூட்டமைப்பினர் புதுடில்லியைச் சென்றடைந்திருந்தனர். இதனால் சுப்பி;ரமணிய சுவாமிகள் இந்தியாவின் கோமாளி அரசியல்வாதியாக பகிரங்கமாக அசடு வழிய நேர்ந்திருந்தது.
‘வடமாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரங்களைக் கேட்க முடியாது’
இதேவேளை, சமூக சேவையாளர் என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்றும், வல்லுனர் என்றும் கருதப்படுவதாகக் கூறப்படுகின்ற இந்தியராகிய அவ்தாஷ் கௌஷலும், தமிழ் மக்கள், வடமாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரங்களைக் கோர முடியாது என்று கூறியிருக்கின்றார்.
இலங்கையில் காணாமல் போயுள்ளவர்களைப் பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இலங்கை;க ஜனாதிபதியினால், சர்வதேச அளவில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் உறுப்பினராகிய அவ்தாஷ் கௌஷல் இலங்கை ஜனாதிபதிக்கு மிகவும் வேண்டியவர் என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாகவே அவர் தனிப்பட்ட ரீதியில் இந்த நிபுணத்துவ ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. இந்த நியமனத்திற்கும் இந்திய அரசுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
தனிப்பட்ட ரீதியில் இலங்கை அரசின் சார்பில் ஆலோசனை சேவையாற்றுவதற்கே அவ்தாஷ் கௌஷல் முன்வந்துள்ளார். அவ்வாறு வந்துள்ள ஒருவர், இனப்பிரச்சி;னையினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு, அந்தப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்காக அலைமோதிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் மனம் புண்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில், ஒரு விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ள அவர், அர்த்தமற்ற முறையில் அரசியல் பேசுவது அழகல்ல. அது அவருக்கு அவசியமான ஒரு விடயம் என்றும் கருத முடியாது.
‘இலங்கையில் உள்ள தமிழர்கள் தம்மை இலங்கையர்கள் என்று உணர வேண்டும். அந்த வகையில் இலங்கையின் சட்டத்திற்கும், அரசியமைப்புக்கும் உட்பட வேண்டும். அவர்கள் வடமாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரங்களைக் கேட்க முடியாது’ என்று அவர் இந்தியாவின் பிரபலமான செய்தித்தாளாகிய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியிருக்கின்றார்.
‘இலங்கையின் இறைமையை இந்தியாவும், இந்தியாவின் இறைமையை இலங்கையும் மதிக்க வேண்டும். பிரச்சினைகளில் ஆலோசனைகளை வழங்க முடியும், ஆனால் இதனை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுக்க முடியாது. இந்தியா பெரிய அண்ணன் என்ற வகையில் அழுத்தம் பிரயோகிக்கக் கூடாது. இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, இந்தியா பாராட்ட வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை தொடர்ந்து முன்செல்ல வேண்டும் என்ற வலியுறுத்த வேண்டும்’ என்றும் அவ்தாஷ் கௌஷல் கூறியிருக்கின்றார்.
ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறைமையை மதித்துச் செயற்படுவதென்பதும், மற்றொரு நாட்டின் மீது இன்னுமொரு நாடு அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்க விடயம்தான். ஆனால், சர்வதேச ஒப்பந்தம் ஒன்றின் மூலம் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை நடை முறைப்படுத்தாமல் அரசியல் ரீதியாக பேய்க்காட்ட முற்படுகின்ற ஓர் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காமல் வேறு என்ன செய்ய முடியும்?
இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு ஈடுபாடு என்பன ஆரம்ப கட்டத்த்pல் உள்ள ஒரு விடமாகக் கூற முடியாது. இனப்பிரச்சினை விடயத்தில், தமிழ் மக்கள் சார்பி;ல் இந்தியா இலங்கையுடனான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் இந்தியா கடமைப்பட்டிருக்கின்றது. பொறுப்பேற்றிருக்கின்றது. உப கண்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற பலகோடி மக்களின் ஜனநாயக அரசியல் நிர்வாகத் தலைமையைக் கொண்டுள்ள இந்தியா இந்தப் பொறுப்பில் இருந்து இலகுவில் விலகிச் செல்ல முடியாது. இதன் காரணமாகத்தான், இலங்கை விவகரங்கள் அனைத்திலும், அது தொடர்ச்சியாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபாடு காட்டி வந்துள்ளது. இப்போதும் ஈடுபாடு கொண்டிருக்கின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில் சுப்பிரமணிய சுவாமி, அவ்தாஷ் கௌஷல் பொன்றவர்கள், இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் தான்தோன்றித்தனமாகக் கருத்துக்களை வெளியிடுவது என்பது, அவர்களின் அந்தஸ்தை கேள்விக்குள்ளாக்குவதாகிவிடும். பொறுப்பெடுத்த வேலையையும், வந்த வேலையையும் பார்ப்பதை விடுத்து அரசியல் மேதாவித்தனத்தை வெளிப்படுத்த முற்படுவது விபரீதங்களுக்கே வழிவகுப்பதாக அமையும்.
காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அவ்தாஷ் கௌஷல், அர்த்தமற்ற வகையில் அரசியல் பேசுவதென்பது, அவர் ஆற்றப் போகின்ற பணியில் அவருக்கு உள்ள பக்கசார்பற்ற பங்கு குறித்து பலத்த ஐயப்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கே உதவும்.
அவ்தாஷ் கௌஷலின் அர்த்தமற்ற அரசியல் பேச்சானது, ஏற்கனவே நம்பிக்கையற்று, செல்லாக்காசாகியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை, மேலும் மோசமாக்குவதற்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அத்துடன், யுத்தத்தினாலும், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் மனிதாபிமான முறையில் நீதி வழங்குவதற்குப் பதிலாக இந்த ஆலோசனைக்குழுவும் பக்கசார்பாகவே நடந்து கொண்டிருக்கின்றது என்ற அவச்சொல்லுக்கு உள்ளாக்கவே செய்யும் என்பதிலும் ஐயமில்லை.
















