கூட்டமைப்பின் இந்திய பயணமும் முரண்பட்ட அறிக்கைகளும்!
இரா.சம்பந்தன்:
ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ள நிலையில், நாட்டை பிரித்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோர முடியாது.
சுமந்திரன்:
நாட்டைப்பிரிக்காத ஐக்கிய இலங்கைக்குள் சிறந்த அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது. நாட்டை துண்டாடும் நிகழ்ச்சி நிரல் கூட்டமைப்பிடம் இல்லை.
செல்வம் அடைக்கலநாதன்:
இலங்கையில் இருக்கக்கூடிய இந்தியத்தூதுவருக்கு விசேட அதிகாரங்கள் அளிக்கப்பட்டு, கவனம் செலுத்தப்படும் என்று மோடி கூறினார்.
மாவை.சேனாதிராசா:
இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை, முழுமையாக இந்தியாவும் வெளியிட மாட்டாது. நாமும் வெளியிட முடியாது.
பொன்.செல்வராசா:
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, 13வது திருத்தச்சட்டமா? அல்லது அதற்கு அப்பால் சென்ற தீர்வா? என்பதை தான் ஆராய்வதாகவும், அதனை தன்னிடம் விட்டு விடுமாறும் மோடி கூறினார். அத்துடன் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி எம்முடனான உரையாடலின் போது, தலைவர் சம்பந்தனை இலங்கையின் கௌரவமான ஒரு தலைவர் எனப்பாராட்டியது எமக்கு மிகுந்த பெருமையாக இருந்தது.
சுரேஸ் பிறேமச்சந்திரன்:
இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதாயின் இந்தியா பார்வையாளராகவேனும் இருக்க வேண்டும், என்று நாம் வலியுறுத்தியுள்ளோம்.
இந்தியாவுக்கு பயணம் செய்து இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியையும், இந்திய உயர்மட்ட அரசியல் குழுவினரையும் சந்தித்த பின்னர், அந்தக்குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தச்சந்திப்புகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துகளே மேலே கூறப்பட்டுள்ளவை ஆகும்.
இந்தப்பழமும் புளிக்கும்!
மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனப்படுகொலைகளுடன் ஈழ விடுதலைப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட காரணமானவர்கள் என்று, அரசியல் அவதானிகளாலும், தமிழின உணர்வாளர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்திருக்கும் சூழலில், இந்தியாவின் புதிய அரசுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு என்பதால், ஊடகங்கள் அதிகப்படியாகவே கூட்டமைப்பின் இந்திய பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டன.
அதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கத்தான் செய்கின்றது. இலங்கைத்தமிழர் இனப்பிரச்சினை விவகாரங்களில் நரேந்திரமோடி தலைமையிலான புதிய இந்திய அரசின் அணுகுமுறைகளையும், அந்த அரசின் வெளிவிவகார கொள்கைகளையும் மதிப்பீடு செய்து கொள்வதற்கு கூட்டமைப்பின் இந்திய பயணம் ஒரு கருவியாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் மன்மோகன்சிங் தலைமையிலான முன்னாள் இந்திய அரசினதும், நரேந்திரமோடி தலைமையிலான இந்நாள் இந்திய அரசினதும் வெளிவிவகாரக்கொள்கைகளில் எவ்வித வேறுபாடுகளும் இருப்பதாகத்தெரியவில்லை. சிறு திருத்தம் மட்டுமே. மன்மோகன் அரசு 10+03=13 என்றும், மோடி அரசு 07+06=13 என்றும் பாடம் சொல்லிக்கொடுத்திருப்பதாகவே உணர முடிகின்றது.
ஏனெனில் சந்திப்பில் ஈடுபட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை தொகுத்து பார்த்தாலே போதும், அதில் ஒரு வெறுமை, ஏமாற்றம் இயல்பாகவே தொனிக்கிறது. “பானையில் இருந்தாலே, அகப்பையில் வரும்” என்று தமிழில் ஒரு முதுமொழி ஒன்று உண்டு. பெருத்த எதிர்பார்ப்போடு பானைக்குள் நுழைக்கப்பட்ட அகப்பை எவ்வித பருக்கையும் இல்லாமல் வெளியே வந்திருப்பதை, ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியையும் அவர்களின் பேச்சுகளில் அவதானிக்க முடிகின்றது. ஆயினும் அவர்கள் தமது பேச்சுகளில் நம்பிக்கையீனங்கள், அதிருப்திகளை மறைத்துப்பேச கடுமையாக முயன்றிருக்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை.
இந்த உந்துதல் காரணமாக இவர்கள், “ஒருவருக்கு ஒருவர் முரண் பேச்சுப்பேசி மக்களை குழப்பமடைய செய்திருக்கிறார்கள்” என்பதே உண்மை! திருப்தி அளிக்காத ஒரு சந்திப்பை “எல்லாம் சுபம்” என்று காட்டுவதற்காக, இவர்கள் வலிந்து எடுத்த முயற்சி இம்முறை சொதப்பலில் முடிந்திருக்கிறது.
இவர்களிடமிருந்து இயல்பாகவே (தானாகவே) புலப்பட்டிருக்கும் இந்த குழப்பகரமான பேச்சுகளே போதும், இவர்கள் அங்கு ஒன்றோ பலவாறோ ஆன, ஏதோ சில விசயங்களில் சொதப்பி விட்டு வந்துள்ளனர் என்பதை முடிவு செய்து கொள்ள. கூடவே இந்த குழு, வெற்றிக்கனியோடு வந்ததா? வெறும் கையை வீசிக்கொண்டு வந்ததா? என்பதை இதைக்கொண்டே அளவீடு செய்து கொள்ளவும் முடியும்.
சம்பந்தனினதும் சுமந்திரனினதும் பேச்சுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருந்தாலும் கூட, ஏனைய நால்வரினதும் பேச்சுகள் எவ்வகையிலும் ஒன்றோடு ஒன்று பொருந்தி வரவில்லை. இவற்றிலிருந்து நாம் மிகத்தெளிவாகவே ஒரு இறுதி முடிவுக்கு வர முடியும். குறித்த சந்திப்பில் ஓரிருவரினது சுயமனவிருப்புகளும், தனிப்பட்ட கருத்துகளுமே ஆதிக்கம் செலுத்தியுள்ளன என்பதே அதுவாகும்.
தெரிந்தே மறுபடியும் மறுபடியும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தவறுகளிலிருந்து தம்மை தகவமைத்துக்கொள்ளாமல், தமது பலவீனங்களை பூசி மெழுகி மூடி மறைப்பதில் கூட்டமைப்பினர் காட்டிய சிரத்தையையும், அக்கறையையும், கவனிப்பையும் அவர்கள் எதில் காட்டியிருக்க வேண்டும்?
கூட்டமைப்பின் குறைபாடுகளும், பழுதுகளும்!
முதலாவதாக,
இந்தியப்பயணத்துக்கு முன்னர், “அந்தக்குழுவில் யார் யார் இடம்பெறப்போகிறார்கள்?” என்பதை முடிவு செய்த பின்னர், அந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஒன்று கூடி, “இந்தியப்பிரதமர் மோடியிடமும், இந்திய உயர்மட்ட அரசியல் குழுவிடமும் எத்தகைய விடையங்களை பேச வேண்டும்? எவற்றை வலியுறுத்த வேண்டும்?” என்று கலந்தாலோசித்திருக்க வேண்டும். அதற்கென ஒரு நிகழ்ச்சி முன்வரைபை தயாரித்திருக்க வேண்டும்.
அதில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு), மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமுக அமைப்புகளின் கருத்துகளும் வலியுறுத்தல்களும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் குறித்த சந்திப்பு சம்பந்தன், சுமந்திரன், மாவை, செல்வம், சுரேஸ் உள்ளிட்டவர்களின் குடும்ப பிரச்சினை பற்றியது கிடையாது, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் இன மக்களின் வாழ்வுரிமையுடன் தொடர்புடைய விவகாரமாகும்.
கொஞ்சம் சறுக்கினாலும் அடி தனி ஒரு மனிதனுக்கல்ல, மொத்த இனத்தின் மீதும் பலமாகவே விழும்! ஒரு மரதன் ஓட்டப்பந்தயத்தில் அதன் தொடக்க நிலை, வெற்றிக்கு எவ்வளவு முக்கியமாக கொள்ளப்படுகிறதோ, அதனை ஒத்த செயல்முறை ஒன்றில் இவர்கள் தமது அரசியல் அநுபவ முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பொறுப்புணர்ச்சியற்ற தன்மையும் கூட (Knowledge without Character).
இரண்டாவதாக,
சந்திப்புகள் முடிந்த பின்னரும் கூட, பேசப்பட்ட விடையங்கள் தொடர்பில் “எவற்றை ஊடகங்களுக்கு கூற வேண்டும். எவற்றை பகிரங்கப்படுத்தக்கூடாது.” என்பது பற்றி மீண்டும் இவர்கள் தமக்குள் ஒரு உள்ளக கலந்துரையாடலை நடத்திய பின்னரே, ஊடகங்களுக்கு கருத்து கூறியிருக்க வேண்டும். அவ்வுள்ளக கலந்துரையாடலிலேயே பொறுப்பு வாய்ந்த ஒருவர் (ஏகமனதாக அதிகாரமளிக்கப்பட்டவர்) ஊடாக ஊடகங்களுக்கு தெரிவிப்பதா? இல்லை தனித்து தெரிவிப்பதா? என்பதையும் முடிவு செய்திருக்க வேண்டும்.
முதலாவது: இரண்டாவது: குறித்த இரண்டு அணுகுமுறைகளும் உலகெல்லாம் உள்ள அரசியல் கட்சிகள் பலவும் கடைப்பிடித்து வரும் பொதுவான நடைமுறைகளாகும். தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நலன் சார்ந்தும், அம்மக்களின் முடிக்குரிய ஆட்சி நிலத்தின் பாதுகாப்பு கருதியும் “கத்தியின் மீது நடப்பது போல” பூகோள, பிராந்திய அரசியல் விவகாரங்களை நன்கு உய்த்துணர்ந்து, ஜாக்கிரதையாக நின்று நிதானித்து செயலாற்றும், கட்டுப்பாடும் கடமையுணர்ச்சியும் கொள்கையும் உள்ள கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் அவ்வாறே தொழில்படும்.
ஆனால் இங்கோ கூட்டமைப்பினர், முதலாவது விதியை பின்பற்ற தவறியதால், “முதல் கோணல் முற்றும் கோணலாகி” அரசியலில் முழுவதையும் சொதப்பியிருக்கிறார்கள்.
குறிப்பாக, சிறீலங்காவை பொறுத்தவரை அமைச்சரவை முடிவுகளை அமைச்சரவையின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தீர்மானங்களை முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜயந்தவும் அறிவித்து வருவது, அவர்களது கட்சியை நம்பி வாக்களித்த மக்களுக்கு அளிக்கப்படும் கௌரவமாகும். இதனால் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படுகின்றது. கட்டமைப்பு, கட்டுப்பாடு, ஒழுக்கம் தொடர்பில் கட்சி மீது நல்ல அபிப்பிராயங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. மக்களின் எண்ணங்கள் கட்சியை நோக்கியே தூண்டப்படுகின்றன. இந்த மனத்தூண்டல்கள் கொள்கை வழி ஈர்ப்பாகி, மக்கள் சுயமாகவே கட்சியின் பங்காளிகளாகி விடுகின்றனர். இந்த அணுகுமுறையே மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக அக்கட்சி மிளிர்வதற்கு காரணமாகிறது.
மாறாக ஐந்து கட்சிகளின் தொகுப்பாக இருந்த கூட்டமைப்போ, ஐந்து நான்காகி (தமிழர் விடுதலைக்கூட்டணியின் வெளியேற்றம்), இப்போது இந்த நான்கில் இருந்து ஒன்று “மூக்கணாங்கயிறு இல்லாத முரட்டுக்காளையாக கொம்புக்கு மண்ணெடுத்துக்கொண்டு” கட்டமைப்பை உடைத்துக்கொண்டு காட்டுவழி ஓடுவதற்கு (இலங்கை தமிழரசுக்கட்சி) திமிரிக்கொண்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது.
“இராஜதந்திரம்” என்றால் என்ன? ஒரு நபரோ ஒரு கட்சியோ, தனது கொள்கைகள் கருத்துகள் செய்கைகள் தொடர்பில், உடன்பாடு இல்லாமல் முரண்பட்டு எதிர்த்தளத்தில் நிற்பவர்களையும் தம்பால் ஈர்த்து, அக்கொள்கைகள் கருத்துகள் செய்கைகளின் பக்கம் இழுபட்டு வர வைப்பதே. அதாவது “முறிய விடாமல் வளைந்து வர” வைப்பதாகும்.
எனவே கூட்டமைப்பிடம் அவர்களே தம் வாயால் மூச்சுக்கு முந்நூறு தடவை பிரசங்கம் செய்யும் “இராஜதந்திரம்” என்பது இருந்திருந்தால், ஐந்து பத்தாகி, பத்து பதினைந்தாகியிருக்க வேண்டுமே தவிர, ஐந்து நான்காகி போயிருக்க கூடாது. நான்கு மூன்றாகி, மூன்று ஒன்றாகியும் போவது தகாது.
மேலும், “ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் (மோடியின்) விருப்பமாக உள்ள நிலையில், நாட்டை பிரித்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எப்படி நாங்கள் கோர முடியும்?” என்று சம்பந்தன் அழுத்த திருத்தமாக புலம்பியிருப்பதிலிருந்து “இராஜதந்திரம்” என்பது இவர்களிடம் உண்டா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மூன்றாவதாக,
ரம்புக்வெலவும், சுசில் பிரேம்ஜயந்தவும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தும் போது, அறிவிக்கப்படும் முடிவுகளுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் பிரமுகர்களை தமக்கு அருகில் அமர்த்தி வைத்துக்கொண்டே தீர்மானங்களை அறிவிக்கிறார்கள். இதனால் அங்கு “நான் பெரியவன், நீ பெரியவன்” என்ற ஈகோவுக்கும், “மீடியாக்கள் என்னை கண்டுகொள்ளாமல் விட்டு விடுமா? (யாராவது ஒருவரின், தன்னைப்பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விடுமா)” என்ற மனப்பிரமைக்கும் அவசியம் இல்லாமல் போவதுடன், “அறிவிக்கப்பட்ட முடிவுகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது” என்று அம்முடிவுகளுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மறுப்புக்கூறுவதற்கும் வாய்ப்பில்லாமல் போகிறது.
ஆனால் கூட்டமைப்பின் பிரதிநிதிகளோ, இந்த “Media Coverage” தொடர்பில் தேவையற்ற பயம், மனக்குழப்பம், ஈகோ காரணமாக, ஆளாளுக்கு முட்டிமோதி முந்திக்கொண்டு கட்டுக்கோப்பில்லாமல் (மடை திறந்த வெள்ளம் போல) முடிவுகளை, தீர்மானங்களை எழுந்தாமானமாக அவரவர் விருப்புக்கு (தன்னிச்சையாக) அறிவிப்பது ஆரோக்கியமற்றது. இதுவே பல வழியில் அநாவசிய குழப்பங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் வாய்க்கால் திறத்து விடுகிறது. அத்துடன் பெயரளவில் மட்டுமே “கூட்டமைப்பின் பேச்சாளர்” எனும் பதவியில் ஒருவர் அமர்த்தப்பட்டிருக்கிறார் என்பதையும் தாள தம்பட்டங்கள் அடித்து அறிவிக்கிறது.
எனவே One Party, One Vision, One Voice, One Nation, One Action ஆகாமல் இருக்கும் வரையிலும், பின்னர் அது,
காணாமல் போகச்செய்யப்பட்டோரை கண்டறியும் குழு,
அரசியல் கைதிகளின் பாதுகாப்பு, விடுதலையை வலியுறுத்தும் குழு,
போரால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் பேணும் குழு,
போரால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சொத்து, உடைமை அழிவுகளை மதிப்பிடும் குழு,
போரால் கைவிடப்பட்ட சிறுவர்கள், முதியோர்கள் நலன் பேணும் குழு,
முன்னாள் போராளிகள், விதவைகள் மறுவாழ்வு நிதியம்,
நிலம், காணி அபகரிப்பு விவகாரங்களை கையாளும் குழு,
சட்டத்தரணிகளை உள்ளடக்கிய சட்டக்குழு,
வெளிவிவகாரங்களை கையாளும் குழு,
அரசியல் தீர்வை வரையறை செய்யும் (கொள்கை வகுப்பு) குழு,
அரசியல் உயர்மட்ட பீடம், ஆலோசனைக்குழு,
சர்வதேச உறவுகள் தொடர்பகம்,
நிதிக்குழு, நீதிக்குழு, தேர்தல் குழு
என்று அத்தியாவசிய கட்டமைப்புகளை அமைக்காத வரையிலும் இந்த பழுதுகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யவும் முடியாது. பலவீனங்களை களையவும் முடியாது.
இவர்கள் தம்மை சுயமதிப்பீட்டுக்கு உள்படுத்தி தம்மை தகவமைக்காத வரைக்கும், மக்களின் எண்ணங்கள் கட்சியை நோக்கி தூண்டப்படவும் மாட்டாது. மக்கள் சுயமாகவே கட்சியின் பங்காளிகளாக ஈர்க்கப்படவும் மாட்டார்கள். மாறாக மேலே கூறப்பட்டுள்ள சிறுபிள்ளைத்தனங்களும், கோமாளித்தனங்களும் தொடர்ந்தும் நகைப்புக்கிடமாக நீண்டு கொண்டே போகுமாகவிருந்தால், மக்கள் சலிப்புத்தன்மைக்கும் வெறுப்புணர்ச்சிக்கும் ஆள்பட்டு எச்சசொச்ச நம்பிக்கையையும் இழந்து சோர்வடைந்து விடுவார்கள். மக்களுக்கும் கட்சிகளுக்கும் ஆன உறவில் விரிசல் விழுந்து, இடைவெளிகள் பெரியதாகி மக்களிலிருந்து இவர்கள் ரொம்ப தூரம் அந்நியப்பட்டே போவார்கள்.
நான்காவதாக,
பகிரங்கப்படுத்தப்படாமல் சில விசயங்கள் இரகசியம் காக்கப்பட வேண்டுமாக இருந்தால், அதுகூட மக்களின் நலன் சார்ந்த ஒரு முடிவாகவே எடுக்கப்பட வேண்டுமே தவிர, கட்சியின் தலைவர்கள் தமது மோதாவித்தனத்தை முரசறைவதாக அதனை அறிவிக்கவும், பயன்படுத்தவும் கூடாது.
“இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை, முழுமையாக இந்தியாவும் வெளியிட மாட்டாது. நாமும் வெளியிட முடியாது” என்று, மாவை.சேனாதிராசா ஏதோ ஒரு புதுப்பட “trailer” மாதிரி, இந்தியாவிலிருந்து வந்ததும் வராததுமாக சும்மா ஒப்புக்கு பரபரப்பைக்கூட்டி அவசர அவசரமாக அறிவித்திருந்தார். “என்னட்ட ஒரு ஜாடியும், அந்த ஜாடிக்குள்ள ஒரு பூதமும் இருக்கு. மூடியை திறந்து விட்டன், இலங்கைத்தீவில் விளைவுகள் மோசமாக இருக்கும்.” என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா, யாரை நம்ப வைக்க முயன்றார். அரசையா? அல்லது தமிழ் மக்களையா?
தன் மடியில் கடும் கனதியை கட்டிக்கொண்டு, அதை சுமக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் முடியாமல், பொத்திப்பொத்தி வைத்திருப்பது போலவும், அது “ஏதோ மலையை மத்தாக கொண்டு கடலை மோராக கடைஞ்சி, நாளைக்கே ஈழம் தருவதாக மோடி கூறினார்” என்றவாறும் தோரணையை உருவாக்கி, வழமை போலவே மாவை ஒரு முழுநீளப்படத்தை ஓட்ட முயன்றார்.
உண்மையில், மோடி எதையும் மூடி வைக்காமல் எல்லாவற்றையும் வெளிப்படையாகவே கூட்டமைப்பிடம் போட்டுடைத்து விட்டார். “நாட்டைப்பிரிக்காத ஐக்கிய இலங்கைக்குள் சிறந்த அரசியல் தீர்வு ஒன்றுக்கு இந்தியா பங்களிப்பு வழங்கும்.” எனும் செய்தியே கூட்டமைப்பிடம் சொல்லப்பட்டிருக்கிறது. மன்மோகன்சிங் அரசின் நிலைப்பாடு எதுவோ, அதுவே மோடி அரசின் நிலைப்பாடும் என்பதையே இது காட்டுகின்றது.
ஆனால் இந்த உண்மையை மறைத்ததிலிருந்து, தமக்கு வாக்களித்த மக்களுக்காகவாவது கூட்டமைப்பினர் எங்கும், எந்நேரமும், எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருந்திருக்கிறார்களா? உளத்தூய்மையுடன் பணி செய்திருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்புவது தவிர்க்க முடியாததொன்றாகிறது.
தமிழக கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளுக்கு சம்பந்தனின் மறைமுக செய்தி!
“ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ள நிலையில், நாட்டை பிரித்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோர முடியாது.” என்று சென்னையில் பத்திரிகையாளர்களை கூட்டி இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்திருப்பதானது,
கண்ணை மூடிக்கொண்டு மோடியின் வழிமொழிவை தாறுமாறாக ஆதரித்தவாறு, அதன் வழி ஒற்றிப்போக நாங்கள் தயாராகி விட்டோம். “ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு” என்பதே எங்களது நிலைப்பாடும் விருப்பமும். இந்த விடையத்தில் எங்களுக்கு பூரண உடன்பாடும் சம்மதமுமே. எனவே நீங்கள் யாரும் இங்கிருந்து கொண்டு (தமிழகத்தில்) “தனித்தமிழீழம் தான் ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு” என்று குரல் உயர்த்தக்கூடாது. “எங்களுக்கு அப்பிடி இப்பிடி என்று எதையும் சொல்ல வரக்கூடாது. ஆர்ப்பாட்டம் பேரணி கண்டனக்கூட்டம் அறிக்கை என்று சத்தம் போட்டு எங்கள குடையக்கூடாது. கறைச்சல் தரக்கூடாது.” என்ற செய்தியை, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதன் பிரமுகர்கள், இளையோர் மாணவ அமைப்புகள், தமிழின உணர்வாளர்களுக்கு சம்பந்தன் சூசகமாக சொல்லியிருக்கிறார். (இதையே சுமந்திரனும் முன்பு ஒருமுறை சென்னையில் சட்டத்தரணிகள் மத்தியில் வலியுறுத்தியிருந்தார்.)
இது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதன் பிரமுகர்கள், அமைப்புகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையா? கட்டளையா? எந்த வகையானது என்பதை தமிழக உறவுகள் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் சென்னையில் சம்பந்தன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பானது, யாழ்ப்பாணத்தில் மாவை ஓட்ட முயற்சித்த “ஏதோ மலையை மத்தாக கொண்டு கடலை மோராக கடைஞ்சி, நாளைக்கே ஈழம் தருவதாக மோடி கூறினார்” என்றவாறான விம்பப்படத்தை, ஒருநாள் கூட ஓட்ட விடாமல் தடாலடியாக தடுத்து நிறுத்தியிருக்கிறது.
சிறீலங்கா அரசுக்கு அரசியல் சதுரங்கத்தில் அதிர்ச்சியான checkக்கும், தமிழ் மக்களுக்கு தீர்வு விசயத்தில் வாயில் கற்கண்டு போட்டதாய் மகிழ்ச்சியான ஒரு சேதியும் இருப்பதாக பிரமையை உருவாக்கி, மாவை பொடி வைத்து பேசியதையெல்லாம் சம்பந்தனின் பேச்சு தவிடு பொடியாக்கியிருக்கிறது. மாவையின் படம் மொக்கை வாங்க, மாவையோ முக்காடு போட்டிருக்கிறார். “அட! இவ்வளவுதானா விசயம்? இதுக்குத்தானா இவ்வளவு பில்டப்?” என்று எல்லோரும் அங்கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
“ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு” என்று மோடி கூறியதை, ஏதோ “ஈழம் அமைத்து தருவதாக” மோடி கூறியது போல ஊடகங்களுக்கும், மக்களுக்கும் கூட்டமைப்பினர் காட்ட முயன்றிருந்தனர். ஆனால் வழமை போன்ற இந்த அரசியல் சொல்ச்சித்து விளையாட்டுகள், வார்த்தை யாலங்கள் இம்முறை ரசிக்கும் படியாகவோ, அது என்னவாக இருக்கும்? ஏதுவாக இருக்கும்? என்று அறியும் ஆர்வத்தையோ, மக்களுக்கு கொடுக்கவில்லை.
இந்தியாவின் (மோடியின்) விருப்பம், “ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு” என்பதாக இருக்கும்போது, நாம் என்ன செய்ய முடியும்? என்று கையை விரித்து, தனது தலைமைத்துவ தகுதியை, அரசியல் சாணக்கியத்தை, இராஜ‘தந்திரத்தை’ காட்டியிருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் சொதப்பல்கள், பலவீனங்கள், குறைபாடுகள், கோளாறுகள், தளம்பல்களை பூசிமெழுகி மறைப்பதற்காக “தலைவர் சம்பந்தனை இலங்கையின் கௌரவமான ஒரு தலைவர் என மோடி பாராட்டியது எமக்கு மிகுந்த பெருமையாக இருந்தது.” என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அறிக்கை விட்டு, ஊடகங்களினதும், உலகத்தமிழர்களினதும் காதில் பூச்சுற்ற முயற்சித்துள்ளார்.
இந்த அறிக்கையை விடும்போது, “பாராட்டு கேட்கத்தானா இங்கிருந்து அவ்வளவு தூரம் பெருந்தொகை மக்கள் வரிப்பணத்தை செலவழித்து பயணம் போனீர்கள்? என்று அரசியல் அவதானிகள் எதிர்கேள்வி கேட்பார்களே, என்ற அடிப்படைச்சிந்தனை புரிதல் கூட இல்லாமல், முந்திக்கொண்டு அறிக்கை விட்டால் போதும், தாம் கூறும் எல்லாவற்றையும் மக்களும் ஊடகங்களும் அப்படியே நம்பிவிட்டுப்போய் விடுவார்கள் என்ற கற்பனை மிதப்பில் அம்புலி மாமா கதை கூறியிருக்கிறார். எல்லா இடங்களிலும், எல்லா வேளைகளிலும் ஒரே மாதிரியான உத்திகள் செல்லாது என்பதை இவர்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.
முறையற்ற கூட்டுக்கட்சி நடைமுறைகளும், ஒரு கட்சி தனிக்கட்சி என்ற மமதையும், நான் தான் பெரியவன் என்ற கோதாவும், பொறுப்புகள் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க மறுக்கும் மனஇறுக்கமும், கூடிக்கலந்தாலோசிக்கும் இயல்பும், சிவில் சமுக அமைப்புகள் பொது ஜனங்களிடம் கருத்துகள் கேட்கும் ஜனநாயகப்பண்பும் அற்ற தலைமைத்துவ, நிர்வாக நெறிமுறைகளுமே கூட்டமைப்பின் இன்றுள்ள குறைபாடுகள், பழுதுகள், பலவீனங்களுக்கு பிரதான காரணமாகும்.
“உலகத்தில் ஒரே காலநிலையும், ஒரே அதிகாரமும் நிலைப்பதில்லை!” என்பதே உலக வரலாறு. தமது அறிவுப்புலமை, ஆளுமைகளால் உலகத்தின் கவனத்தைப்பெற்ற பல நாடுகளினதும், பல்வேறு அமைப்புகளினதும் வல்லமை தலைவர்களுக்கு, வரலாறு இந்த பாடத்தை நன்றே கற்றுக்கொடுத்தே கடந்து போயிருக்கிறது. இந்தப்படிப்பினைகளிலிருந்து இன்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் பாடம் கற்று, தம்மை சமகால அரசியல் ஒழுங்குக்கேற்ப தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
அதைவிடுத்து, வீண் பெருமை, கர்வம், பேராசை, பிடிவாதம் கொள்பவர்களுக்கு உண்டு அழிவே!
கட்டுரையாளர்,
-அ.ஈழம் சேகுவேரா-
















