கடந்த 6 ஆண்டுகளாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் பணிபுரிந்து வந்த நவநீதம்பிள்ளை நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
இலங்கையில் சிங்கள படையினர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடைபெற்ற போர் குற்றம் தொடர்பாக, இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடக் காரணமாக இருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.
நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இலங்கை சென்று ஆய்வு நடத்தினார். ஓய்வு பெறுவதற்கு முன்பே அவர் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஓய்வு பெற்ற நவநீதம்பிளை சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தான் ஓய்வு பெற்றாலும் இலங்கைக்கு எதிராக, போர் குற்ற விசாரணை சிறப்பான முறையில் செயல்படும் என நவநீதம்பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை அவர்களின் பதவிக்கு ஜோர்டன் நாட்டின் இளவரசர் சையத் அல் ஹூசைன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று முறைப்படி பொறுப்பேற்கிறார். சையத் அல் ஹூசைன் ஐ.நா.வுக்கான ஜோர்டன் நாட்டு தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, நவநீதம்பிள்ளை ஓய்வுபெறுவதற்கு வருத்தம் தெரிவித்து, இலங்கையைச் சேர்ந்த பல அரசு சாரா நிறுவனங்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளன.
















