பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் ஒன்றுகூடி, யாழ்.பொதுநூலகம் முன்பாக நடத்திய கவனயீர்ப்புப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அம்மக்களை கண்டும் காணாததுமாகச்சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் செய்கை தொடர்பில், தான் “சம்பந்தனுக்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக” இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா கேட்டுக்கொண்டார்.
கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போய் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் கடந்த 30.08.2014 சனிக்கிழமை அன்று வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடும் உறவுகளின் இணையத்தினதும், வடமாகாண பிரஜைகள் குழுக்களினதும் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது.
வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள், தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சர்வமதத்தலைவர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள், காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளைத்தேடும் தமிழ் முஸ்லிம் சிங்கள குடும்பங்கள், உறவினர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், சமுக ஆர்வலர்கள் என எழுநூறுக்கும் மேல்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் வடக்கிலும் தென்னிலங்கையிலும் இருந்து கலந்துகொண்ட தமிழ் முஸ்லிம் சிங்கள இன மக்களின் உணர்வுப்பகிர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.
“சம்பந்தன் ஐயா சம்பந்தமே இல்லாமல் போய் விட்டார்.” அபலைத்தாயின் கண்ணீர்க்கதை!
இந்த நிகழ்ச்சியில், தனது துயரத்தை பகிர்ந்து கொண்ட மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த தாய் ஒருவர்,
“பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் வந்தவேளை, யாழ்.பொதுநூலகம் முன்பாக தாம் போராட்டம் நடத்தியதாகவும், பொலிஸார் மறியல் போட்டு தம்மை நூலகத்தை நோக்கி முன்னேறிச்செல்ல விடாது தடுத்ததாகவும், எனினும் தாம் மறியலை உடைத்துக்கொண்டு நூலக வாசலை அண்மித்த போது இரண்டு வாகனங்கள் புறப்பட்டுச்சென்று விட்டதாகவும், அதைத்தொடர்ந்து மூன்றாவதாக வந்த வாகனத்துக்குள் பிரதமர் கமரூன் இருப்பதாக நினைத்து தாம் அதனை முற்றுகையிட்ட போது, அதற்குள் சம்பந்தன் ஐயா இருந்ததாகவும், தாம் கண்ணீருடன் கத்திக்கதறி அழுவதை பார்த்தும்கூட, “சம்பந்தன் ஐயா! உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்ற மாதிரி” எங்களைக்கண்டு கொள்ளாமலேயே போய்விட்டார்.
ஐயாமாரே! நாங்க உங்களிட்ட அப்பிடி என்னத்த கேட்கப்போறம். எங்கட பிள்ளைகளை கண்டுப்பிடிச்சு தாங்க எண்டு, உங்களிட்ட நாங்க கேட்கப்போறதில்ல. உங்களால அது முடியாது எண்டும் எங்களுக்குத்தெரியும். சரி நீங்க வாகனத்த விட்டு கீழ இறங்காட்டியும் பரவாயில்ல. கண்ணாடியையாவது பதிச்சி எங்கள நோக்கி கையைத்தானும் அசைச்சி, “நான் உங்கள் கூடவே இருக்கிறன்” என்ற நம்பிக்கையை கூடத்தானுமா தரக்கூடாது?” என்று கண்ணீர் மல்கக்கேட்டபோது, சபையில் இருந்த எல்லோரும் கண் கலங்கினர்.
பின்னர் குறித்த நிகழ்ச்சியில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதே, மாவை.சேனாதிராசா சம்பந்தனின் தவறுக்காக, தான் சம்பந்தன் சார்பாக காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களிடமும், உறவினர்களிடமும் பகிரங்க மன்னிப்புக்கோருவதாக கூறி, பொதுமன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
எங்கே சென்று முடியும் இந்த மன்னிப்பு கலாசாரம்?
ஏற்கனவே கடந்த 2012ம் வருடம் மே மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு மேதின நிகழ்ச்சியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் சிங்கக்கொடியை தூக்கி அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தமைக்கு தமிழ் தேசிய ஊடகங்களும், தமிழ் மக்களும் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தபோது, சம்பந்தனின் செய்கை தொடர்பில், தான் சம்பந்தனுக்காக பகிரங்க மன்னிப்புக்கோருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா (04.05.2012 அன்று) கேட்டுக்கொண்டதும்,
அதற்கு சம்பந்தன், “எனக்காக யாரும் மன்னிப்பு கோர தேவையில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எனக்காக மன்னிப்பு கேட்க உவர் யார்? எனக்கென்று சுயபுத்தியிருக்கு. என் புத்திக்கு என்ன செய்யணும், ஏது செய்யணும் என்று எனக்குத்தெரியும். என்ன வச்சு யாரும் சுயவிளம்பரம் தேட வேண்டாம்.” என்று மறுத்துப்பேசி, தனது செயலை நியாயப்படுத்தி, மாவையை கடும் எச்சரிக்கை செய்திருந்ததும் தெரிந்ததே.
இந்நிலையில், மாவை.சேனாதிராசா சம்பந்தன் சார்பில் மீண்டும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இருந்துதான் பார்ப்போமே, இனி என்ன தான் நடக்கப்போகிறது. இதற்கும் சம்பந்தனின் மறுப்பறிக்கை வருமா? வராதா என்று?
-கவரிமான்-
















