தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு வேறு எந்த நாடுகளும் தாயகம் அல்ல என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு, தெற்கு – தமிழ், சிங்களம் என்ற பேதம் எம்மிடமில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம்.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் எம்மிடம் கிடையாது. நாம் அனைவரும் இலங்கையில் பிறந்தவர்கள். தமிழ் மக்களே நீங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தானே? வெளிநாட்டில் பிறக்கவில்லையே! இதுதான் நம் எல்லோருக்குமான நாடு. எமக்கு வேறு நாடு கிடையாது.
வேறு நாடுகள் தமிழ் மக்களைப் பாரமெடுக்கப் போவதுமில்லை. அதனை மனதிற்கொண்டு நாம் பிறந்த இந்த தாய்த் திருநாட்டை நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைகள். பிரதேச சபைகள் என அனைத்தும் எம் வசமே உள்ளன. இதன் மூலம் இந்த மாகாணத்தை முன்னேற்றச் செய்து அதன் மூலம் நாட்டையும் முன்னேற்றி உலகை வெற்றிகொள்ள எம்மால் முடியும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இன்றுள்ள சுதந்திரம் இருக்கவில்லை. அதனை மக்கள் மறக்கமாட்டார்கள். சில இடங்களுக்கு எம்மால் போக முடியாமலும் மக்கள் எம்மை நெருங்க முடியாமலும் இருந்த காலம் இந்த நாட்டில் இருந்தது. நாம் அதனை மாற்றியுள்ளோம்.
மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் மகா வித்தியால யத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடம் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
















