யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் அதற்கான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்து வருவதாக தெரியவருகிறது. காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்படும் ஜனாதிபதி மாளிகையின் நிர்மாணப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட விதம் மற்றும் செலவான பணம் பற்றி எந்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
காங்கேசன்துறையில் அழகான கடற்கரை பகுதியில் சுமார் ஒரு கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள் இந்த ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மாளிகையுடன் ஜனாதிபதிக்கு நாட்டில் ஒதுக்கப்பட்டுள்ள மாளிகைகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிக்கும்.
ஏற்கனவே கொழும்பு, கண்டி, நுவரெலியா, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் ஜனாதிபதி மாளிகைகள் இருக்கின்றன. கொழும்பில் ஜனாதிபதி மாளிகை இருந்த போதிலும் பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட அலரி மாளிகையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஜனாதிபதிக்காக வருடாந்தம் பெருந்தொகை பணம் வரவு செலவுத் திட்டம் மூலம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் ஜனாதிபதிக்காக 856 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இதனை தவிர கடந்த ஏப்ரல் மாதம் மேலும் 34 கோடி ரூபா ஜனாதிபதியின் செலவுக்கான ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















