பிரிட்டனில் 17 வயது சிறுவனொருவனிற்கு கத்தியால் குத்தியதற்காக சுலக்சன் திருச்செல்வம் என்ற தமிழ் இளைஞனிற்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது சுலக்சன் திருச்செல்வம் முரட்டுக்குணமுடைய வலிய மோதலுக்கு செல்லும் சுபாவமுடையவர் என அவரால் கத்திக்குத்திற்கிலக்கான டுசான் சினு எனும் மாணவன் தெரிவித்துள்ளான். பாடசாலையில் திருச்செல்வம் சினுவை மிரட்டியதைத் தொடர்ந்து அவனது குடும்பமே தாங்கள் முன்னர் வசித்து வந்த பகுதியில் இருந்து வெளியேறியதாக சினு தெரிவித்தான்.
மே 11ம் திகதி சினு கென்சிங்டனில் உள்ள தனது நண்பனை பார்க்கச் சென்ற வேளை சுலக்சனை எதிர்கொண்டுள்ளார். அவ்வேளை சுலக்சன் சினுவைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன் நீ ஏன் இங்கு வருகிறாய் நீ இங்கு வசிக்கவில்லை தானே என கேட்டுள்ளான். பின்னர் திருச்செல்வம் வெற்றுப் போத்தலை சினு மீது எறிந்ததாகவும் சினுவும் திருப்பி எறிந்ததாகவும் சினுவுக்காக வாதாடும் சட்டத்தரணி தெரிவித்தார். தான் பின்னர் நண்பர் வீட்டிற்குச் சென்றதாகவும் திருச்செல்வம் ஏதோ சத்தமிட்டதாகவும் தெரிவித்த சினு சிறிது நேரத்தின் பின்னர் திருச்செல்வம் வீட்டின் கதவை ஆவேசமாக தட்டியதாகவும் வெளியே மோதலுக்கு வராவிட்டால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவேன் என சத்தமிட்டதாகவும் சினு மேலும் குறிப்பிட்டான்.
சினு வெளியெ சென்ற வேளை திருச்செல்வம் அவன் மீது தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளான். சினு திருப்பி திருச்செல்வத்தை துரத்திப் பிடித்துள்ளான். அவ்வேளையே தான் ஏதோ கூரான பொருள் குத்தப்பட்டதையும் இரத்தம் வருவதையும் அவன் கண்டுள்ளான். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்குச் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவனது நெஞ்சில் கூரான பொருளால் குத்தப்பட்ட காயம் தென்பட்டது. அவனது உடலில் இருந்து, முறிந்த கத்தியை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருச்செல்வத்தைத் பொலிஸார் தேடிய போது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சில தினங்களுக்குப் பின்னர் சமூக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் சரணடைந்துள்ளார். கூரான ஆயுதத்தால் வேண்டுமென்றே தாக்கி காயப்படுத்தியதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
திருச்செல்வத்திற்க்காக வாதாடிய சட்டத்தரணி அவர் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர் எனவும் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும். மகன் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என தெரியாமல் குழம்பி உள்ளதாகவும் குறிப்பிட்டார். தீர்ப்பளித்த நீதிபதி திருச்செல்வத்தைப் பார்த்து உனது 19வது பிறந்த நாள் அன்று இந்த தீர்ப்பை வழங்குவது எனக்கு கவலையளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
















