வர்த்தகமானியில் குறிப்பிடப்படாத ஒரு பிரதேசத்தை, பிரதேச செயலகமாக உருவாக்கி, அதற்கு சகல உதவிகளையும் எவ்வாறு வழங்கி வருகின்றீர்கள் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் வெலிஓயா பிரதேச செயலாளர் ஆகியோரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவின் முடிவுப் பகுதியில் உள்ள இடமே “மணலாறு” இதற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் மிகுந்த மீன் வளம் உள்ளது. இந்த மணலாறு என்னும் தமிழ் பிரதேசத்தை வெலிஓயா என்று சிங்களத்தில் பெயர் மாற்றி, அங்கே ஒரு பிரதேச செயலகத்தை கூட சிங்களம் நடத்திவருகிறது. இதற்கு பிரதேச செயலாளர்,இருக்கிறார். மற்றும் கொழும்பில் இருந்து அரச பணம் இதற்கு தாராளமாக வழங்கப்பட்டு வருகிறது. இங்கே உள்ள தமிழர்களை அகற்றி முற்று முழுதாத சிங்களவர்களை அரசு குடியேற்றி வருகிறது.
வெலிஓயா பிரதேசம் தொடர்பில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். வெலிஓயாவிற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததுடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கியமை சட்டவிரோதச் செயல்கள் ஆகும். பதிவில்லாத பிரதேச செயலகத்திற்கு எவ்வாறு உதவிகள் செய்ய முடியும் ? என முதலமைச்சர் மேலும் கேள்வி எழுப்பினார். பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனுப்பிய ஒரு கடிதத்தைக் கொண்டு எவ்வாறு நீங்கள், வெலிஓயாப் பிரதேசத்திற்கு இத்தனை உதவிகளைச் செய்ய முடியும். அவ்வாறு செய்தது தவறு என்றும் குறிப்பிட்டார்.
இதனால் காரசாரமான விவாதம் மூண்டது. இதேவேளை, அப்பிரதேசத்தில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன என அமைச்சர் ரிஷத் பதீயூதீன் வினாவினார். அதற்கு “தெரியாது” என்ற பதிலை மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. சிங்களத்தின் திட்டப்படி, மணலாற்றை கொக்கிளாய் மற்றும் நாயாறு போன்ற இடங்களோடு இணைத்து, பின்னர் அதனை அனுராதபுர மாவட்டத்தின் கீழ் கொண்டுவர உள்ளார்கள். அனுராதபுர மாவட்டத்திற்கு கடல் எல்லை கிடையாது. எனவே இதனைக் கடல் எல்லையாக அம்மாவட்டம் பாவிக்கும். அம்மாவட்டத்தில் புதிதாக மீனவர்களை குடியேற்ற, அரசு இவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
















