யாங்கோன், மியான்மர்: நன்னடத்தை மீறல் காரணமாக மியான்மர் அழகியிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்துள்ள அவர் தன்னிடமும், தனது நாட்டிடமும் போட்டி அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வாங்கிய பட்டத்தையும், மகுடத்தையும் திருப்பித் தர மாட்டேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். அழகிப் போட்டியில் பெற்ற மகுடம் மற்றும் மார்பகப் பெருக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள அளிக்கப்பட்ட 10,000 டாலருடன் சொல்லாமல் கொள்ளாமல் அந்த அழகி மியான்மருக்குத் திரும்பி விட்டதாக போட்டி அமைப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்தப் புகார்களை மியான்மர் அழகி மறுத்துள்ளார்.
மியான்மரைச் சேர்ந்தவர் மே மியாட் நோ. இவருக்கு 16 வயதாகிறது. கடந்த மே மாதம் தென் கொரியாவில் நடந்த மிஸ் ஆசியா பசிபிக் உலக அழகிப் போட்டியில் இவர் பட்டம் வென்றார்.
ஆனால் கடந்த வாரம் இவருக்கு அளிக்கப்பட்ட பட்டத்தைத் திரும்பப் பெறுவதாக திடீரென போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர். 10,000 டாலர் பணம் மற்றும் மகுடத்துடன் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டதாக அமைப்பாளர்கள் கூறினர். அந்தப் பணத்தை மார்பகப் பெருக்கத்திற்காக தாங்கள் வழங்கியதாகவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மன்னிப்பு கேளுங்கள் இதனால் கோபமடைந்துள்ளார் மே. இதுகுறித்து யாங்கோன் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது நாட்டின் பெயரையும், எனது சுய மரியாதையையும் கெடுக்கும் வகையில் போட்டி அமைப்பாளர்கள் பேசியுள்ளனர். இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
என்னிடமும் எனது நாட்டிடமும் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால்தான் பட்டத்தைத் திரும்பத் தருவேன்.
நான் மார்புகளைப் பெரிதுபடுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை எதையுமும் செய்யவில்லை. அவர்கள் தான் தலை முதல் கால் வரை பல்வேறு அழகுபடுத்தும் சிகிச்சைகளை மேற்கொள்ள வலியுறுத்தினர். ஆனால் நான் மறுத்து விட்டேன். எனது மார்புகள் இயற்கை அழகுடன்தான் உள்ளன. இதுகுறித்து நான் விரிவாகப் பேச விரும்பவில்லை என்றார்.
ஆனால் போட்டி அமைப்பாளர் யங் சோய் இதை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், மே, செயற்கை மார்பகத்தைப் பொருத்தியுள்ளார். இதற்கு புகைப்பட ஆதாரம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், மே பொய் சொல்கிறார். அவர் பட்டத்தைத் திரும்பத் தர வேண்டும். பொய் பேசுவதற்காக அவர்தான் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்தான் எங்களது பெயரையும், நம்பகத்தன்மையையும் கெடுத்துள்ளார் என்றார்.
யங் மேலும் கூறுகையில், அவர் ஒத்துழைப்பு தராவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றார்.
மியான்மர் நாடு பல காலமாக ராணுவ ஆட்சியாளர்களின் கையில் உள்ளது. சமீப காலமாகத்தான் பெண்கள் சர்வதேச அழகிப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் பெண்கள் மத்தியில் அழகிப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் அதிகரித்துள்ளது.
மேலும் முன்பு போல இல்லாமல் மியான்மரில் தற்போது சர்வதேச அழகு சாதனப் பொருட்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. மேலும் பாப் கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
















