‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தால் வந்த வினை…..

facebook4ஈரோட்டில், ‘ பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த விவகாரத்தில் கார் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதையொட்டி அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். அவருடைய மகன் சண்முகம் (வயது 32). கார் டிரைவர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து வீதியில் மனைவி மரகதம் மலர் (25), மகள் சியாமளா(4) ஆகியோருடன் வசித்து வந்தார். சொந்தமாக கார் வைத்து டிரைவராக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஈரோடு பெருந்துறை ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள ஒரு சந்து பகுதியில் காலி இடத்தில் சண்முகம் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சண்முகம் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன், சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது ‘பேஸ்புக்‘ சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த விவகாரத்தில் சண்முகத்தை அவரது நண்பரே குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது. இதுபற்றிய மேலும் விவரங்கள் வருமாறு:-

சண்முகம் கார் டிரைவராக இருந்ததால் அவருக்கு பலருடன் நட்பு இருந்தது. தினமும் பல நண்பர்களுடன் பேசி வருவார். அப்படி மாமரத்துப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் நண்பர் ஆனார். இந்தநிலையில் கார்த்திகேயனின் பெயரை தவறாக பயன்படுத்தி ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் சண்முகத்தின் நண்பர் ஒருவர் பதிவேற்றம் செய்து உள்ளார்.

அந்த பதிவில் கார்த்திகேயனின் செல்போன் எண்ணையும் அந்த நண்பர் பதிவு செய்து இருந்ததால், தவறான நோக்கத்தில் பலர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு உள்ளனர். இது அவருக்கு ஆத்திரத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர் சண்முகத்தின் நண்பர் என்பதால் கார்த்திகேயன் சண்முகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஆனாலும் அந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. எனவே நேற்று முன்தினம் இதுதொடர்பாக கார்த்திகேயன் மற்றும் சிலர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை சண்முகம் வழக்கம்போல வீட்டில் இருந்து புறப்பட்டார். வரும் வழியில் கார்த்திகேயன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் மீண்டும் ‘பேஸ்புக்‘ சமூகவலைதள பதிவேற்றம் தொடர்பாக பேசினார்கள். அப்போது சண்முகத்தின் தூண்டுதலின் பேரில்தான் ‘பேஸ்புக்‘ சமூக வலைதள பதிவேற்றம் நடந்ததாக குற்றம் சாட்டினார்கள். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் கையில் கொண்டு வந்த கத்தியால் சண்முகத்தின் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் சண்முகத்தின் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே விழுந்து துடித்தார். அதைப்பார்த்த கார்த்திகேயன் மற்றும் அவருடன் வந்தவர்கள் தப்பி ஓடினார்கள். மேற்கண்ட விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கார்த்திகேயனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: , ,

Leave a Reply